முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எஸ்கேப்பிஸம்

ஒவ்வொன்றிற்கும் ஒரு இஸம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. எதாவது ஒரு இஸத்திலோ அல்லது எதாவது ஒரு இஸ்ட்டாகவோ இருந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

கடவுள் பக்தி இருக்கிறது எனில் தீயிஸம், இல்லை எனில் ஏதீயிஸம், கும்பிடுவேன் ஆனால் நம்பிக்கை இல்லை என்றால் நியூட்ரலிஸம். இதில் குறிப்பாக நியூட்ரலிஸத்தில் பெரும்பான்மையானோர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாக சொல்லப்போனால் தான் எந்த பக்கம் என்ற முடிவெடுக்கத் தெரியாமல் தடுமாறுபவர்கள்.

போலவே, பெரியாரிஸம், கம்யூனிஸம், மார்க்ஸிஸம், சேடிஸம் என ஏதோ ஒன்றை, ஒரு தத்துவத்தை, ஒரு தலைவனை, ஒரு கொள்கையை, பல நேரங்களில் நமக்கே தெரியாமல், புரியாமல், புரிந்துகொள்ள முயலாமல் நம்மை சுற்றி இருப்பவர்களோ அல்லது நாம் பரவலாக பார்ப்பதின் தாக்கமாகவோ நாம் பின் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறோம்.

நட்பு, காதல் என்ற உணர்வுகளில் துவங்கி வேலை, வாழ்க்கைமுறை என அனைத்திலும் இரண்டற கலந்து கிடக்கும் இந்த இஸங்களில் இருந்து தப்பிக்க ஏதேனும் வழி உண்டா? உண்டு! அதுதான் எஸ்கேப்பிஸம்.

இதை நீங்கள் ஏற்கனவே கேள்விப் பட்டிருக்கலாம் அல்லது கேள்விப்படாமலும் இருந்திருக்கலாம். இந்த இரண்டு கூட்டத்தாருக்கும் நான் இதை சொல்லிவிட நினைப்பதும் ஒரு வகையில் எஸ்கேப்பிஸம்தான்.

நீர்போல இரு என புரூஸ்லீ சொல்லி இருப்பதை கேள்விப்பட்டிருப்போம். ஆங்கிலத்தில்,"Be water my friend" என்று வரும். அதன் உள்ளர்த்தம்,"நீர் எந்த குடுவைக்குள் அடைக்கப்பட்டாலும், அந்த குடுவையின் உருவத்தை எடுத்துக்கொள்ளும். அதுபோல நீங்கள் இருங்கள்." என்பதுதான். உண்மையில் அப்படி இருப்பது பச்சை பச்சோந்தித்தனம்.

இதையே கொஞ்சம் மாற்றி சொன்னால் அதுதான் எஸ்கேப்பிஸம். நீரைப்போலத்தான் இருக்க வேண்டும். எங்கும் தேங்காமல் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் அதுதான் எஸ்கேப்பிஸம்.

சுயநலம் பொதுநலம் என்ற எதுவும் இதில் இருக்காது. வெறுமனே எதிலும் தலையிடாமல், எது நம்மிடம் தலையிட்டாலும் அதிலிருந்து/அதை கடந்து சென்றுவிட வேண்டும். நாம் வெறுக்கும் மனிதர்களிடம் இருந்து விலகி இருக்க சில நேரங்களில் ஹெட்போன்/இயர்போன் பயன்படுத்துவோம். அதை எல்லா நேரமும் பயன்படுத்தினால் அதுவே எஸ்கேப்பிஸம்.

வேலை பார்க்கும் இடத்தில், படிக்கும் இடத்தில் இருக்கும் கோபத்தையும், வன்மத்தையும், நமக்குள் கால காலமாய் வேரூன்றிக் கிடக்கும் வன்முறையையும் வெளிக்காட்ட முடியாமல் நம் நண்பர்களிடமோ அல்லது காதலியிடமோ அல்லது மனைவியடமோ, இவர்கள் யாரும் இல்லையெனில் பெற்றோரிடமோ காண்பிப்பவர்கள் பலர் இருப்பார்கள். எவரையும் பாதிக்காமல் சிகரெட் அல்லது சாராயம் குடித்துவிட்டு,"அது வெறும் அந்த நேரத்து பிரச்சனை/அவமானம். நாளை சரியாகிவிடும்." என கடந்து செல்பவர்கள் வெகு சிலர். அவர்கள் அவர்களையே அறியாமல் எஸ்கேப்பிஸசத்தின் வாசலில் கதவைத் திறக்க யாராவது இருக்கிறார்களா என காத்திருப்பவர்கள். இவர்கள் இன்னும் மெருகேறி,"என்னமோ பண்ணுங்கடா. எனக்கென்ன வந்துச்சு?" எனும் நிலையை அடைதல், எஸ்கேப்பிஸம்.

பாடல் கேட்பது, சினிமா பார்ப்பது, புத்தகம் படிப்பது, பயணங்கள் செய்வது, கடவுள் பக்தியில் ஆழ்ந்து கிடப்பது, உடற்பயிற்சி நிலையம் செல்வது, போதைக்கு அடிமையாவது, இன்ஸ்டாகிராமில் மூழ்கிக் கிடப்பது, இயந்திரத்தைப் போல யாரிடமும் பேசகூட நேரம் ஒதுக்காமல் வேலை செய்வது என மனிதர்களிடமிருந்து மட்டுமின்றி தனக்குள் இருக்கும் பெரும் வலியிலிருந்தும் விலக எத்தனிக்கும் அனைவரும் அவர்களுக்கே தெரியாமல் இந்த எஸ்கேப்பிஸத்தை பின் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். என்ன ஒன்று சரியான நெறிமுறையும், அதற்கான கோட்பாடும், தெளிந்த தத்துவமும், வழிநடத்தும் தலைவனும் இல்லா ஒரு இஸமாக இருப்பதுதான் இதன் ஆகப்பெரும் தோல்வி. ஆகப்பெரும் வெற்றியும் கூட.

இதற்கென நான் மேலே குறிப்பிட்ட மற்ற இஸங்களுக்கு இருக்கும் அத்தனையும் இருந்திருந்தால் இத்தனை பேரும் இத்தனை வருடமாக அதை தொடர்ந்து செய்து கொண்டிருக்க மாட்டார்கள். நான் இந்த இஸத்தை சார்ந்தவனல்ல என வெட்டி பெருமை பேசுவதற்காகவே வம்படியாக நியூட்ரலிஸவாதியாக மாறிப்போய் இருப்பார்கள். இதையே வெற்றி என்கிறேன்.

இன்னும் தெளிவாக சொல்லப்போனால், தன் மனத்திற்கு சந்தோஷத்தைத் தராத எதிலிருந்தும் விலகி ஓடுதல்தான் இதன் சாரம்சம். 1845 இல் பிறந்த லட்விக் -2 என்ற அரசன் இதில் தேர்ச்சி பெற்ற ஒருவர். அவரை அவர் காலத்தவர்கள் பைத்தியக்கார அரசன் என்றனர். இந்த காலத்தவர்களும் அப்படி சொன்னாலும், பரவாயில்லை என்கிறேன். நீங்கள் சொல்வதில் இருந்து எஸ்கேப்பிஸம் காப்பாற்றும்.

இன்றைய தேதிக்கு இந்த எஸ்கேப்பிஸத்திற்கு என எந்த ஒரு தலைவனும் இல்லை என்பதனாலும் இது நிச்சயமாய் நிலை நிறுத்தப்பட வேண்டிய ஒரு கொள்கை என்பதனாலும், இதற்கு நானே என்னை தலைவனாக அறிவித்துக் கொள்கிறேன். அதற்கான அத்தனை தகுதிகளும் என்னிடம் இருப்பதாக நான் உணர்கிறேன். போலவே இதுதான் எஸ்கேப்பிஸம் ஆகிற்றே! தலைவனாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியை தரவில்லை எனில் அதிலிருந்தும் எஸ்கேப் ஆகிவிடுவேன்.


- எழுத்தாளுமை இக்ரிஸ் (22/02/2025)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பகவத் கீதை - சர்ச்சையும் விளக்கமும்.

கடந்த சில நாட்களுக்கு முன் பகவத் கீதையில் சொல்லப்பட்ட,"கடமையை செய் பலனை எதிர்பாராதே" என்ற வசனத்தை மேற்கோளிட்டு ஒரு பதிவு இட்டிருந்தேன். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலவே எதிர்ப்புகளும் கிளம்பியது. அதைப்பற்றிய ஒரு விரிவு பார்வைதான் இந்த பதிவு. முதலில் கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பது மாபெரும் மூடத்தனம். இங்கு கடமை என்பதை நாம் பல விதத்தில் பொருத்தலாம். எதாவது ஒரு உறவின் வாயிலாகவோ அல்லது பிறருக்கும் செய்யும் உதவி வாயிலாகவே அல்லது தொழில்/வேலை ரீதியாகவோ எப்படி வேண்டுமானாலும் கடமை என்பதை பொருத்தலாம். இதில் எதிலும் நமக்கு யாதொரு பலனும் இல்லை என்றால் அதை எப்படி செய்வீர்கள்? உதாரணமாக, கோவிலுக்கு செல்வது புண்ணியம் அல்லது நினைத்தது நடக்கும் அல்லது சொர்க்கத்திற்கு செல்வோம் என்றொரு மூடநம்பிக்கை இல்லை எனில் இந்தியாவில் கோவில்களே இருக்காது. கோவிலுக்கு செல்வது தீங்கானது, சுடுகாட்டை பார்ப்பது போன்றது, பூனை குறுக்கே செல்வது போன்றது என சொல்லப்பட்டிருந்தால் கோவில்கள் என்ற அமைப்புகள் இருந்திருக்கும் என நினைக்கிறீர்களா? நிச்சயமாக இருந்திருக்காது. அதற்கு பின்னால் இருக்கும் அரசியலும், பிரி...

என் பார்வையில் காதல்

எது காதல்? எப்படி காதல்? நீ என்ன புரிந்து வைத்து இருக்கிறாய் காதலைப் பற்றி? உனக்கு என்ன தெரியும் காதலைப்பற்றி? என்றெல்லாம் பல கேள்விகளை சுமந்தபடி, இந்த பதிவை எழுத கடமைப்பட்டு இருக்கிறேன். நான் இன்றைய தேதியில் பார்த்த வகையில், இவர்களுக்கு காதல் என்பது ஒரு பொழுதுபோக்காகவும், தனிமையில் இருந்து தப்பிக்க உதவும் ஒரு வழியாகவும் மட்டுமே இருக்கிறது. நான் ஒரு ஓல்ட் சோல். நான் பார்த்த, நான் பழகிய, நான் கண்டு வியந்த பெரும் காதல்கள் ஏராளம். எ.கா., ஓகே கண்மணி திரைப்படத்தில் எல்லோரும் துல்கர்-நித்யா மேனன் ஜோடியை புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்த பொழுது நான் மட்டும் பிரகாஷ்ராஜ்-லீலா சாம்சன் ஜோடியை -தனியாக, மனதார, எவ்வித நெருடலுமின்றி- கொண்டாடிக் கொண்டிருந்தேன். கவனித்ததுண்டா? வீட்டில் இருக்கும் பெற்றோர்கள் ஆயிரம் முறை ஐ லவ் யூ சொல்லுவதை? மணிக்கொருமுறை ஒருமுறை மிஸ் யூ சொல்லுவதை? நிமிடத்திற்கு நிமிடம் முத்தங்கள் கொடுப்பதை? இது எதுவும் நடக்காது. குறைந்தபட்சம் பிறர் கண்ணில் படும்படி நடக்காது. ஆயிரம் சண்டை, லட்சம் மனஸ்தாபம், கோடி முறை பிரிந்துவிடலாம் என்ற கோபம் இருந்திருக்கும். ஆனால் காலை உணவை டிஃபன் பாக்ஸில் ...

சரியா? (2017 பதிவுகள்)

தலைக்கவசம் அணியுங்கள் என விளம்பரம் செய்யும் அரசு வாகனத்தை சரியாக ஓட்டுங்கள் என்றோ பொறுமையை கையாளுங்கள் என்றோ விளம்பரப்படுத்தாதது சரியா? வீட்டில், அலுவலகத்தில் இருக்கும் குப்பையை வெளியே போட வேண்டும் என சொல்பவர்கள் அதை குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என சொல்லாதது சரியா? பெண்களின் உடையிலும் நடையிலும் நடத்தையிலும் குறை சொல்பவர்கள் தத்தம் மகன்களை சரியாக வளர்க்காதது சரியா? சாதி என்பது தீண்டாமை என தெரிந்தும் சாதி பார்ப்பதில்லை என பெருமை பேசுபவர்கள் சாதி சான்றிதழ் வாங்குவது சரியா? இலவசங்களும் பணமும் வெற்று சலுகைகளும் கொடுத்து நம்மை முட்டாள் ஆக்குக்கிறார்கள் என தெரிந்தும் ஆக்குபவனையே ஆள அனுமதிப்பது சரியா? ஊழல் லஞ்சம் என அரசு அலுவலகங்கள் சாக்கடையாய் இருந்தாலும் அதில் நம் வேலை நடக்க பணத்தை கொட்டுவது சரியா? பள்ளிகளில் வாழ்க்கைக்கு தேவையான எதுவும் இல்லாமல் அசோகர் மரம் நட்டதையும் சோழர்கள் கோவில் கட்டியதையும் பாண்டியர்கள் தமிழை வளர்ததையும் சொல்லித் தருவது சரியா? பள்ளி கடந்து கல்லூரி வந்ததும் என்ன படித்தால் என்ன வேலை கிடைக்கும் வேலை கொடுப்பவனிடம் எப்படி நடந்து கொள்வது என வேலைக்காரர்களை உருவாக்கும் பட்...