இன்றைய தேதியில் என்னைப்போல எழுத, என்னுடைய பதிவுகளையே எடுத்து பதிவு செய்ய பலர் உருவாகி வருகின்றனர். ஆனால் என்னைப்போல சர்ச்சைகளை ஏற்படுத்த நான் மட்டுமே இருக்கிறேன் என்பதை பெருமையாக சொல்லிக்கொண்டு இந்த பதிவை துவங்குகிறேன். இந்த பதிவு என் பக்கம் இருக்கும் நியாயத்தை சொல்வதற்காக என நினைத்துவிடாதீர்கள். என்ன நடந்தது என்பதை சொல்வதற்காக.
ஞாயிறுகளில் நான் Detox Day கடைபிடிப்பது வழக்கம் என்பது உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும். வீட்டிலேயே உட்கார்ந்து சினிமா பார்த்துக் கொண்டிருக்காமல் இருந்தால் என்ன? சிறிது ஊரை சுற்றுவோம் என 15 நாட்களுக்கு முன் ஓசூர் சென்று இருந்தேன். அது ஒரு சர்ச்சையானது. அதனால் சென்ற வாரம் அமைதியாக இருந்துவிட்டேன். இந்த வாரம் தனுஷ்கோடி செல்லலாம், இந்தியாவின் கடைசி சாலையில் கால் பதிக்கலாம் என கிளம்பினேன்.
சென்று கொண்டிருக்கும்பொழுதே திடீரென திருச்செந்தூர் சென்றால் என்ன? என்றோர் எண்ணம். சரி, புது ஊர்களை காண்பதுதானே எண்ணம், எங்கு சென்றால் என்ன? என வாகனத்தை திருப்பி விட்டேன்.
திருச்செந்தூர் சென்று, கடலில் ஆசைதீர குளித்துவிட்டு கிளம்பியபொழுது அங்கே வந்த ஒரு முதியவர் என்னிடம்,"இவ்ளோ தூரம் வந்துட்டு சாமிய பாக்காமலே போலாம்னு நெனக்கறியா" எனக் கேட்டார். இதுபோன்று புது மனிதர்களை சந்திக்கும் நிகழ்வுகள் என் வாழ்வில் ஏராளம். ஏதோ என்னுடனே பயணித்த ஒருவர், என்னிடம் கேட்பதைப்போல இருந்தது. என்ன இது? யாரென்றே தெரியாத ஒருவர், நான் என்ன செய்யப்போகிறேன் என எப்படி சொல்லிவிட்டு செல்கிறார்? சரி, கோவிலுக்குள் சென்றால்தான் என்ன? என முடிவை மாற்றிக்கொண்டேன்.
அதற்குமுன் வரை தூத்துகுடி உப்பளங்களுக்கு செல்ல வேண்டும், உப்பு தயாரிக்கும் முறைகளை தெரிந்துகொள்ள வேண்டும், முடிந்தால் அந்த தூத்துகுடி கொத்தனாரை பார்க்க வேண்டும் என நினைத்திருந்த நான், கோவிலுக்குள் செல்ல வேண்டும் என நினைத்ததுதான் நான் செய்த ஒரே தவறு.
சிறப்பு தரிசன வரிசை என ஒரு வரிசை இருந்தது. செக்கு மாடு செக்கை சுற்றி வருவதை பார்த்திருக்கிறீர்களா? அதேபோல ஒரே இடத்தில் ஒன்றரை மணி நேரங்களுக்கு மேலாக சுற்றிக் கொண்டிருந்தேன். சிறப்பு தரிசன சீட்டு 100 ரூபாய்க்கு வாங்கி விட்டு கொஞ்சம் கொஞ்சமா நகர்ந்து கோவிலுக்குள் சென்றேன். அதுவரை எனக்கு தெரியாது சட்டை, பனியனை கழற்ற வேண்டும் என்பது.
கருவறைக்கு அருகே செல்ல செல்ல எல்லோரும் சட்டை பனியனை கழற்ற ஆரம்பித்தனர். நான் சில கோவில்களில் கவனித்து இருக்கிறேன். கோவிலின் உஷ்ணம் தாங்காமல் சிலர் சட்டையை கழற்றுவர். குறிப்பாக சைவ வழி கோவில்களில். கவனித்து இருக்கிறீர்களா? சைவ வழி கோவில்கள் உஷ்ணமாகவும், வைணவ வழி கோவில்கள் குளிர்ச்சியாகவும் இருக்கும். அதற்கு பின் பல விஷயங்கள் இருக்கின்றன. ஒருநாள் சைவ வைணவத்தையும் இவர்களின் கூத்துக்களையும் போட்டு உடைப்பேன் காத்திருங்கள்.
ஆனால் இங்கே மாறாக, ஆண்கள் எல்லோரும் சட்டையை கழற்றினர். எல்லோருக்குமா வியர்கிறது? என பெரும் ஆச்சர்யம். அதற்குப் பின்தான் கவனித்தேன்,"ஆலயத்திற்குள் சட்டை,பனியன் அணிந்து வரக் கூடாது" என்ற அறிவிப்பு பலகையை.
இன்னும் கட்டுமானமே முழுவதுமாக முடியாத கோவிலில் சட்டையை கழற்றாமல் இருப்பதிலா பிரச்சனை? என நான் கழற்றவே இல்லை. இதற்காக என்னிடம் பிரச்சனை செய்தார்கள். கிட்டத்தட்ட 10-15 நிமிட வாக்குவாதத்திற்குப் பிறகு, மூன்று மணி நேரம் கால் வலிக்க நின்றது, சிறப்பு தரிசனத்திற்கு 100 ரூபாய் செலவு செய்தது என எல்லாமே வீணாக போனாலும் பரவாயில்லை என அங்கிருந்து வெளியேறிவிட்டேன்.
நான் யார் என தெரிந்து கொள்ள நினைப்பவர்கள், திருச்செந்தூர் கருவறைக்கு முன்னால் உள்ள கண்காணிப்பு காமிராவில் பாருங்கள். அடர் நீல நிற சட்டை அணிந்த, ஆறடி உயரமுள்ள, ஒரு திடகாத்திரமான வாலிபன், ஞாயிற்றுக்கிழமை மதியம் 11:40 மணியளவில், 7-8 ஐயர்களுடனும் 2-3 காவலர்களுடனும் வாக்குவாதம் செய்து கொண்டிருப்பான். அது நான்தான். அங்கே சென்று ஏன் பார்க்க சொல்கிறேன் என்றால், என்ன வேண்டுமானாலும் செய்வோம் என அனத்திய அன்பின் முருக பக்தர்களுக்கு கண்காணிப்பு காமிராவை பார்ப்பதா பெரிய கஷ்டம்?
வெளியேறியதும் என்னுடைய தனிப்பட்ட விருப்பத்தில் இவர்கள் அத்துமீறி தலையிடுவது தவறு என அங்கே இருந்த அலுவலகத்தில் புகாரளித்து இருக்கிறேன். அதில் என்னுடைய பெயர், விலாசம், கைப்பேசி எண் என அனைத்தும் இருக்கும். அதையும் வேண்டுமானால் அங்கிருந்து எடுத்துக் கொள்ளுங்கள். உங்களால்தான் எல்லாமே செய்ய முடியுமே!
ஆனால் இந்த பதிவு விஷயத்தின் பொழுது, நான் பதிவிட்டுவிட்டு உணவருந்த சென்று விட்டேன். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்பொழுதே இதை மாற்றிவிடலாம் என சிந்தித்து விட்டேன். என் நேரமோ என்னமோ, என்னுடைய வங்கிக் கணக்கில் இருந்து பணம் செலுத்த இயலவில்லை. ஏ.டி.எம் மிஷினில் இருந்து பணம் எடுத்து கொண்டு வந்து கொடுத்தேன். அதுவரை அடமானமாக என்னுடைய மொபைல் ஹோட்டலில் இருந்தது. புதிய ஊர், முன்பின் தெரியாத மனிதன் என்பதனால் இதெல்லாம் சாதாரணம். அதனால் என்னால் உடனே பதிவை மாற்றி பதிவிட இயலவில்லை.
ஆன்லைன் வந்து பார்த்தபொழுது கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட வசைகள். இவர்கள் செய்திருந்த கமெண்ட்கள் என் ஈகோவை தூண்டிவிட்டது. இவர்கள் இவ்வளவு பேசியபின் இந்த பதிவை நீக்க வேண்டுமா? இப்படியே இருக்கட்டும். இவர்கள் கதறட்டும் என்றுதான் விட்டுவிட்டேன்.
இது இப்படித்தான் நடந்தது. இப்படி நடந்திருக்ககூடாது என்றெல்லாம் இல்லை. நடந்ததை தடுத்திருக்க நிச்சயமாக என்னால் முடியும். ஆனால் என் ஈகோ விடவில்லை. இப்பொழுதும்,"கமெண்ட்டை ஆஃப் செய்து வைக்க வைத்துட்டான் முருகன்" என அனத்துகிறார்கள். இதை நானே செய்ய வேண்டும் என இருந்தேன். முருகன் பெயரால் நடந்தது என நீங்கள் சந்தோஷப்படுகிறீர்கள் என்றால், சட்டையை கழற்ற வைத்ததும் முருகன் பெயரால்தான் நடந்தது. எனில், இப்பொழுது நான் இட்ட அந்த பதிவு சரியே என்ற நிலைப்பாட்டிற்கு வந்து நிற்கிறேன்.
- எழுத்தாளுமை இக்ரிஸ் (24/03/2025)
கருத்துகள்
கருத்துரையிடுக