என்னுடைய எழுத்துப் பயணத்தில், எத்தனையோ முறை எழுதுவதை நிறுத்தி இருக்கிறேன். மூன்று மாதம், ஆறு மாதம், சில நேரங்களில் வருடம்கூட தேவைப்படும், மீண்டும் எழுத துவங்க. ஆனால், இந்த முறை ஒன்றை எழுத துவங்கி, அதை பாதியில் நிறுத்தி, மீண்டும் அதை தொடரலாம் என நினைத்து, எழுத உட்காருகையில்.. வார்த்தைகள் கிடைக்காமல், அன்று நான் அதை எழுதுவதற்கான காரணமும், இன்று நான் தொடர்வதற்கான மனநிலையும் ஒன்றோடு ஒன்றிணையாமல், தடுமாறி, தடம் மாறி, ஆளரவமற்ற மயானமாய் உணர்கிறேன்.
இந்த தடுமாற்றம், தயக்கம், சிந்திக்கவியலா முட நிலை, ஏன்? எப்படி? எதற்காக? எது தடுக்கிறது? என்ற கேள்விகளை கடந்து.. இந்த நிலையை அப்படியே நிறுத்தி வை, தொடராதே! என்னும் பேராணை பிறப்பிக்கிறது மனது.
கிரகிக்க நினைக்கிறதா? அழிக்க துடிக்கிறதா? வானளாவிய எதிர்ப்புகளுக்கு கலங்காத திமிர் அடங்கிப் போகிறதா? தெரியாது. இருப்பினும், இருக்கிறேன் காத்து கொண்டு.
மீண்டும் பேனா எடுக்கும் தருவாயில், காகிதத்தில் வரைவது ஊதா மையாக இல்லாமல், கருஞ்சிவப்பு இரத்தமாக இருந்தால்.. காகித வாசனையும் இரத்த கெவுளும் சேர்ந்து நாசியை நடனமாட வைத்துவிடும்.
இருப்பினும், அந்த கேள்விக்கு எனக்கு விடை கிடைக்காமல் போகும் காரணம் என்ன? ஏன் என்னால் தொடர இயலவில்லை?
எப்பொழுதும் நான் எழுதும்பொழுது மனிதர்களிடமிருந்து விலகி இருப்பேன் அல்லது அவர்களை உதாசீனப்படுத்திவிடுவேன். வாழ்வில் எனக்கு இருக்கும் வெகு சில பேரானந்தத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் எழுத்து வேலையில் இன்னொருவரின் தலையிடலை நான் பெரியதாக விரும்புவதில்லை. நான் ஒன்றை சிந்தித்து, அதை மெருகேற்றி, தீட்டிக் கொண்டிருக்கையில் அவன்/அவள், அவர்தம் வாழ்வில் நடந்து ஏதாவதொன்றை என்னிடம் பகிர்கையில், நான் என்ன எழுத வேண்டுமோ அதிலிருந்து பிரண்டு விடுவேன்.
இப்பொழுது பெருமளவில் மனிதர்களுடன் நேரம் ஒதுக்குவது காரணமாக இருக்குமா? அல்லது அதே மனிதர்களிடம் மீண்டும் மீண்டும் பேசுவதா? கேட்க புது கதைகள் இல்லாமல் போவதா? பேச புது விசயங்கள் இல்லாமல் தவிப்பதா? அல்லது எனது சுதந்திரம் என்னுடைய எழுத்துக்களாலேயே பறிக்கப்படுகிறதா? என்ன என்று தெளிவாக தெரியவில்லை. அல்லது தெரிந்த ஒன்றை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறதோ என்னமோ?
சில மாதங்களுக்கு முன், சரியாக கடந்த 2024 திசம்பர் மாதத்திற்கு முன் வரை நான் வெறும் பார்வையாளன்தான். அந்த நேரத்தில், பல படைப்பாளர்களிடம் பேச முயன்று தோற்று போய் இருக்கிறேன். ஆனால் அவர்கள் ஏன் பேசவில்லை என்பதை நான் ஓர் படைப்பாளனாக உருப்பெற்ற பின் உணர்கிறேன். நேரம்! பெரும் வரம். ஆனால் அன்றைய தேதியில் என்னுடைய எண்ண ஓட்டம் என்னவாக இருந்தது எனில், "நான் ஓர் படைப்பாளனாக மாறிவிட்டால் குறிப்பாக வெற்றிபெற்ற படைப்பாளனாக, இப்பொழுது இருப்பதைப் போல மாறிவிட்டால், நான் அப்பொழுது எனக்கு வரும் எந்த மெசேஜ்களையும் முடிந்த அளவிற்கு தவிர்த்துவிடக்கூடாது" என்பதுதான் அது. அது ஒருவேளை தவறாக இருக்குமோ என்ற எண்ணம் என்னிடத்தில் உதயமாவது பெரும் வருத்தம்.
எனக்கு மனிதர்களை சந்திப்பது பிடிக்கும். அவர்களுடனான உரையாடல் பிடிக்கும். ஆனால் அவர்களுடன் உரையாடிக்கொண்டே இருப்பது ஏதோ ஒரு இடத்தில் விலகிச் சென்றுவிட்டால் பரவாயில்லை என சிந்திக்க வைக்கிறது. இது எதும் வியாதியா? அல்லது நான் இப்படித்தான் இருந்தேனா? அல்லது படைப்பாளனின் மனநிலையா? இது என்னவாக இருக்கும் என்பதற்கு கூகிளில் கேட்டால் மனநல மருத்துவமனைக்கு செல் என பதில் வரும். உண்மையில் மனநிலையில்தான் மாற்றம் ஏற்படுகிறதா?
எப்பொழுதும் இருந்த ஒன்று இப்படித்தான் இருக்கும் என இருந்த ஒன்றில் ஏதேனும் சிறிது மாற்றத்தை பார்க்கையில், அதன் தாக்கம் நமக்குள் பீறிடும். அந்த பீறிடலின் வெளிப்பாடுதான் இந்த மாற்றமா? தெரியவில்லை. இது ஒரு புறமிருக்க.,
நான் ஒன்றை பார்த்து, நினைத்து, அதன் தாக்கத்தில் ஒன்றை எழுத துவங்கி, எதற்கென தெரியாமல் அதை பாதியில் நிறுத்தி, மீண்டும் அதை துவங்குகையில் எதற்கு வேறொரு கண்ணோட்டம் வர வேண்டும்? அப்படி புதுக் கண்ணோட்டம் வருகிறதெனில் முன்னால் இருந்த கண்ணோட்டத்தின் நிலை என்ன? அப்பொழுது இருந்த நிலைப்பாடு என்ன? நிலைப்பாடுகள் மாறுகின்றனவா? அல்லது கண்ணோட்ட மாற்றத்தின் தாக்கமா? இதை எப்படி சரிவர புரிந்து கொள்வது? அப்படி புரிந்து கொண்டாலும், விடை கிடைத்தாலும், முன்னொரு முறை நான் எழுதியதற்கும் இப்பொழுது எழுத நினைப்பதற்குமான இந்த கால இடைவெளியில் ஏற்பட்ட மிகத்துல்லியமான மாற்றம்தான் என்ன? அப்படி மாறினாலும் சரியாக நான் எதை எனக்கானதாக அல்லது நான் சொல்ல விரும்புவதாக அல்லது நான் புரிந்துகொள்வதாக ஏற்றுக் கொள்வது? தெரியவில்லை.
இது வெறும் ஓவர்திங்கிங் என கடந்துவிட முடியாது. தற்கொலை செய்ய நினைப்பதற்கும், அதிலிருந்து வெளியே வருவதற்கும், மீண்டும் வாழ்வை வாழ்வதற்கும் அல்லது இறந்தே போவதற்கும் இதுபோன்ற சிற்சில மனநிலை மாற்றங்கள்தான் பெரும் காரணமாக அமைந்திருக்கின்றன. எவனையும் எதிர்க்கலாம் என்பதற்கும் எமனிடம் செல்லலாம் என்பதற்குமான இடைவெளி மிகச்சிறியது.
- எழுத்தாளுமை இக்ரிஸ் (14/04/2025)
கருத்துகள்
கருத்துரையிடுக