பெரிதும் பேசப்படாத அல்லது பொதுவெளியில் பகிரப்படாத அல்லது மறைத்து வைக்கப்படுகிற அல்லது ஒதுக்கப்படுகிற அல்லது பாதுகாக்கப்படுகிற ஒரு அதி அற்புத அதேநேரம் அற்ப விஷயமாக நான் பார்ப்பது, காமத்தைதான்.
ஆணோ, பெண்ணோ அவர்களுக்குள் இருக்கும் உடல்ரீதியான காமத்திற்கான தேடலை, மனரீதியான கனவுகளை எங்கும் வெளியே தெரிந்துகொள்ள முடியாமல் அல்லது தெரிந்ததை பகிர்ந்துகொள்ள இயலாத ஓர் கட்டமைப்பு, இந்த சமூகத்தில் நிலவி வருவதை பெரும் அபத்தமாகவே நான் காண்கிறேன்.
குழந்தை பெறுவதை பெரும் போரில் வெற்றி பெற்றதைப்போல கொண்டாடப்படுவதைப்போல, அதன் செயல்முறை ஏன் கொண்டாடப்படுவதில்லை? அல்லது ஏன் மறைக்கப்படுகிறது?
என்னைப் பொறுத்தவரை, இத்தனை பாலியல் வன்புணர்வுகள் நிகழ்வதற்கு முக்கால்வாசி காரணமாக நான் இதைத்தான் கூறுவேன். காமத்தின் தேடல். அதைப்பற்றிய விழிப்புணர்ச்சி இல்லாமையே, வன்புணர்ச்சிக்கு காரணம். உளவியல் ரீதியாக, இது உண்மையாககூட இருக்கலாம்.
இங்கே, கலாச்சாரம் என்றோர் கட்டமைப்பு இருக்கிறது. இவர்களின், கலாச்சாரத்தின் மிக முக்கிய நோக்கம், அந்தரங்க உறுப்பை பாதுகாப்பது. குறிப்பாக, பெண்களின் அந்தரங்க உறுப்பை. என்ன பயன்?
இரவு என்ற நாவலில், சக எழுத்தாளர் ஜெயமோகன் இதை அழகாக மேற்கோளிட்டு இருப்பார்.
ஒரு தேவாலயத்தின் பாதிரியாரும், கதையின் நாயகனும் நிகழ்த்தும் ஓர் உரையாடலின் நடுவே,"நீங்கள் பாவங்கள் ஏதும் செய்தது இல்லையா?" என்பதைப்போல கதாநாயகன் கேட்க,"சுய இன்பம் மேற்கொள்ளும்பொழுது நான் சாத்தானாகிறேன், பாவியாகிறேன்" என்பதைப்போல ஒரு பதில் இருக்கும்.
இதில், உங்கள் புரிதல் சுய இன்பம் என்பது பாவம் என இருந்தால் நீங்கள் ஒரு முட்டாள்.
பாதிரியாருக்கும் காமத்திற்கான தேவை இருக்கிறது, அவரும் மனிதர்தான். இந்த கட்டமைப்பில்தான் பிரச்சனை. அவரை, அதை செய்வது பாவம் என சிந்திக்க வைத்திருக்கிறது என்பது என் வாதம்.
ஏன் இது இப்படியாக இருக்க வேண்டும்? என்ற கேள்வி எனக்குள் இருந்துகொண்டே இருக்கிறது. எதற்கும் பயனில்லாத, இந்தி மொழியை கற்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குள் விதைக்கப்படுகையில், வாழ்க்கைக்கு பயனாக இருக்கும் உடலுறவு பற்றிய விழிப்புணர்வு ஏன் இல்லை? Sex education னால் உங்களுக்கு என்ன பிரச்சனை?
மேற்கில், ஒரு கலாச்சாரம் உள்ளது. உனக்கு பிடித்திருக்கிறதா? வா உடலுறவு வைத்துக் கொள்ளலாம். பிடிக்கவில்லையா? நீ உன் வழியை பார்த்து செல், நான் வேறு யாரிடமேனும் கேட்டுக் கொள்கிறேன் என கடந்துவிடுவர். அவர்களுக்கு காமத்தின்மேல் புரிதல் இருக்கும். வெறும் வடிகால் தேடிக்கொண்டு அலைவதில் பயனில்லை, உடலுறவு கவித்துவமாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.
இதைப் படித்தவுடன், உன் வீட்டில் இருக்கும் பெண்களை அனுப்பி வை எனக் கேட்பீர்கள். உங்கள் வீட்டில் இருக்கும் அத்தனை பெண்களும் ஒரே விபத்தில் அகால மரணம் அடைந்துவிட்டனரா? என திருப்பி கேட்க எனக்கு நிமிடமாகாது. உங்களுக்கு புரிய வைக்க முயல்கிறேன்!
ஏன் நம் நாட்டில் பெண்கள் இரவில் தனியாக எங்கும் செல்ல முடியவில்லை? ஏன் காந்தி பெண் இரவில் செல்ல முடிந்தால்தான் இந்தியாவிற்கே சுதந்திரம் என்றார்? ஏன் பாலியல் வன்புணர்வுகள் நடக்கின்றன? ஒரே பதில், அதைப்பற்றிய விழப்புணர்வு இல்லாமையால்.
ஆபாச படங்களும் ஒருவித பெரும் காரணம் என்பேன். அவைகள் என்ன செய்கின்றன? என்பதே பலருக்கு புரிவதில்லை, சொல்கிறேன்.
முதலில், ஆபாச படங்களில் எந்த ஒரு ஆணும், பெண்ணை நெருங்குவதாக அவர்கள் தயாரிக்க மாட்டார்கள். ஒரு பெண், அவளாகவே வந்து உடலுறவுக்கு அழைப்பாள் என்றுதான் கதையாக இருக்கும். அப்படி ஒன்று நிஜ வாழ்வில் நடக்காது.
இரண்டாவது, முனகல் சப்தம். அது ஆகப்பெரும் போதை. நமக்கு காட்டப்படும், அந்த பெண்ணின் முகபாவனைகளும், நாம் கேட்கும் முனகல் சப்தமும் நம்மை கிறுக்குப் பிடிக்க செய்துவிடும். அதுதான் அவர்களின் வெற்றி, நம் தோல்வி.
பெண்ணை மையப்படுத்தி, நிஜ வாழ்வில் ஒரு பெண் எப்படியெல்லாம் இருக்க மாட்டாளோ அப்படியெல்லாம் கற்பனையாக ஒன்றை உருவாக்கி நமக்கு சமர்ப்பிக்கின்றனர். அந்த கற்பனை சித்தரிப்புகளை நம்பி, நிஜ வாழ்வில் நாம் அசிங்கப்படுவோம் அல்லது காதல் என்று சொல்லியோ அல்லது வன்புணர்வாகவோ இச்சையை தீர்த்துக் கொள்ள நினைக்கிறோம்.
வன்புணர்வு இல்லாத இன்னொரு வகை, பல பெண்களுடன் உடலுறவு கொள்வது. அதற்கு பெரும் காரணம் ஒரு கட்டத்திற்கு மேல் என்ன உருண்டு புரண்டாலும், பெண் படுக்கையில் முனக மாட்டாள். அது, ஆணுக்கு சலிப்பை தரும். வேறு ஒருத்தியை தேடுவான். அவனுக்கு அவள் புதியவள், அவளுக்கு அவன் புதியவன். தாம் கற்ற மொத்த வித்தையையும் பரஸ்பரம் காண்பிக்க நினைப்பர். அங்கே நிகழும் காமம், கவித்துவமாக இருக்கும்.
ஆனால், உண்மை என்னெனில், சரியான முறையில், ஏற்கனவே இருக்கும் பெண்ணிடமே உடலுறவு கொண்டால் நாம் நினைத்தது கிடைக்கும் என சில ஆண்கள் நினைப்பதில்லை.
புனிதக் காதலெல்லாம் கடல் கடந்துவிட்டது. காமத்தை சரியாக தெரிந்துகொண்டு அதை அரங்கேற்றினால் அழகாக இருக்கும் என்பதுதான் என் மொத்த எண்ணமும்.
ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்றெல்லாம் நான் சொல்பவனில்லை. அது அவரவர் விருப்பம். ஆனால், ஒருவர் இருக்கும்பொழுதே, இன்னொருவர் வேண்டும் என நினைப்பது, நிச்சயமாக தவறு!
காதலை நேசி. காதலிப்பவரை சுவாசி. காமத்தை கொண்டாடு!
- எழுத்தாளுமை இக்ரிஸ் (04/04/2025)
கருத்துகள்
கருத்துரையிடுக