குரங்கிலிருந்துதான் மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்தான் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் சில வருடங்களுக்கு முன் பன்றியின் DNA வும் மனிதனின் DNA வும் ஒன்றாக இருப்பதாக மேற்கத்திய நாடுகளில் கண்டுபிடுக்கபட்டது. இது அப்படியே இருக்கட்டும். அவன் எப்படி உருவானான்? என்ன செய்தான்? என்ன செய்கிறான்? என்ன செய்வான்? இதெல்லாம் அவசியமற்றது என்றாலும், விலங்கிலிருந்து வந்த,"அருவறுக்கத் தக்கவன் அவன்" என்பதுதான் எனது முதல் பத்தி.
மனிதன் அவனாகவே சிந்திக்க மாட்டான். சிந்தித்தாலும் செயல்படுத்த மாட்டான். செயல்படுத்த நினைத்தாலும் அதன் பலன் மட்டும் தனக்கு கிடைத்தால் போதுமானது என நினைப்பான். உதாரணமாக, பெற்றோர் தன் பிள்ளைகளை அவர்தம் விருப்பத்திற்கு வளர விடாமல் தத்தம் விருப்பத்திற்கு வளர்ப்பதை சொல்லலாம். கடைசிவரை அவனுக்கு என்ன வேண்டும்? அவன் என்ன நினைக்கிறான்? அவனின் ஆசாபாசங்கள் என்ன? இதைப்பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. அவர்களின் முழுக் கவலையும் சமூகத்தையும், உறவினர்களையும், முகமே தெரியாத எதிர்கால சம்மந்திகளைப் பற்றியும். யாருக்கு என்ன தேவை இருக்கிறது? இவன் இந்நாளில் இப்படித்தான் வாழ வேண்டும் என்பதைப்பற்றி.
சுதந்திரம் என்பது இதில் பெரும் பங்கு வகிக்கிறது. யார் உண்மையில் சுதந்திரமாக இருக்கிறார்கள்? யார் உண்மையில் சுதந்திரமாக செயல்படுகிறார்கள்? யார் உண்மையில் சுதந்திரமாக வாழ்கிறார்கள்? யாரோ ஒருவனின் பேச்சைக் கேட்டு, யாரோ ஒருவரின் வாழ்க்கையைப் பார்த்து, யாரோ ஒருவரின் கனவை சுமந்து, எதற்கென்றே தெரியாமல் செலவுகள் செய்து, பயன்படுத்தாத பொருட்களை, பிடிக்காத மனிதர்களுக்கு முன்,"இதெல்லாம் வச்சுருந்தாதான் கெத்து" என்ற பிம்பத்திற்குள் மாட்டிக்கொள்ள, காலம் முழுக்க வெறுக்கும் வேலைக்கு சென்று கொண்டிருப்பான். கடன் என்ற சொல்லே பெரும் அறுவறுப்பானது. அதை பெருமையாக சிலர் சொல்வதைக் கேட்கும்பொழுது உமட்டிக்கொண்டு வருகிறது.
சில நாட்களுக்கு முன் கடனைப் பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தேன். பின்வருமாறு.,
"மனித உடல் உணவின்றி 28 நாட்களும், நீரின்றி 7 நாட்களும் உயிருடன் இருக்கும். அதற்கும் வழி இல்லையெனில் செத்துப்போ. ஆனால், எக்காரணம் கொண்டும் கடன் வாங்கிவிடாதே."
இந்த பதிவில் நான் பார்த்த சில கமெண்ட்கள் என்னை முகம் சுளிக்க வைத்துவிட்டன. முதன்முறையாக கமெண்ட் செக்ஷனை ஆஃப் செய்து வைத்துவிட்டால் என்ன என சிந்திக்க வைத்தன. ஆனால் அதை நான் எங்கேயும் வெளிக் காட்டிக்கொள்ளவில்லை. குறிப்பாக ப்ராட்கேஸ்ட்டில்கூட இதுபற்றி பேசவில்லை.
முதல் வகை. திறமை இருப்பவன் கடன் வாங்குவான். கடன் வாங்குவதற்கு திறமை தேவையில்லை. சிபில் ஸ்கோர் இருந்தால் போதுமானது. போலவே தொழிலுக்கு என கடன் வாங்கினால்கூட ஏதோ ஒரு வகையில் நியாயம் எனலாம். அதையும் நியாயம் என ஏன் சொல்கிறேன் எனில், இன்றைய தேதியில் ஸ்டாக் மார்க்கெட் வட்டாரங்களில்,"Suzlon Energy" என்று ஒரு ஸ்டாக் பெரிதும் பேசப்பட்டுக் கொண்டு இருக்கிறது. அதன் வரலாற்றை கொஞ்சம் புரட்டிப் பார்த்தால், உங்களுக்கு தெளிவு வரலாம். அழிந்தே போய்விடும் என பலரும் நினைத்த ஒரு நிறுவனம் இன்று அரசாங்கத்திடம் ஒப்பந்தம் போடுமளவிற்கு நிலையாக நிற்கிறது என்பது பெரிய விடயம் என்னைப் பொறுத்தவரை.
இரண்டாம் வகை. குடும்பத்திற்காக, மனைவி மக்களுக்காக கடன் வாங்க வேண்டும். இன்றைய தேதியில் திருமணம் என்பதை பெருமை பீற்றிக் கொள்ளும் ஒரு நிகழ்வாக இவர்கள் நினைப்பதே தவறு. கோவிலில் வைத்து கட்டினால், கழுத்தில் தாலி இருக்க மாட்டேன் என்கிறதா என்ன?. போலவே குழந்தைகளுக்காக. எந்த குழந்தை உங்களிடம் கேட்டது? எனக்கு இது வேண்டும், எனக்கு அது வேண்டும் என்று? உங்களுக்கு எது பிடித்திருக்கிறதோ அதை வாங்கிக் கொடுத்து பழக்கப்படுத்தி விடுகிறீர்கள். போலவே, கல்வியும். கல்வி நிறுவனங்களுக்கு இவர்கள் அழிக்கும் பணத்தை சேர்த்து வைத்தால் அந்த குழந்தை வளர்ந்தபின் தொழிலதிபர் ஆவதற்கே போதுமானதாக இருக்கும். கல்வி அவசியமில்லையா எனக் கேட்டால், படிக்கும் பிள்ளை எங்கிருந்தாலும் படிக்கும் எனும் வாதத்தை முன் வைக்கிறேன். வாக்குவாதத்திற்கு தயாராக இருப்பவர்கள் எனக்கு தனிப்பட்ட அரட்டையில் செய்தி அனுப்புங்கள்.
அதேபோல, மனிதன் சிந்திப்பதைப் பற்றி முன்னால் குறிப்பிட்டு இருந்தேன். யாருக்கும் அவர்தம் வாழ்க்கையை அவர்களே வாழ வேண்டும் என்ற குறைந்தபட்ச அறிவுகூட இருப்பதில்லை.
என்னுடைய இந்த இன்ஸ்ட்டாகிராம் கணக்கை வைதது பேசுவோம். உங்களுக்கு சுலபமாக புரியலாம்.
இன்று (12/04/2025) காலை எனக்கு ஒரு கால் வந்தது. காலில் பேசியவர் நான் இரண்டு பதிவுகளுக்கு முன் பதிந்த பதிவைப் பற்றி பேசினார் (Reel - 207). நான் அதைப்பற்றி பேசி முடித்தபின்,"நான் படித்த பொழுது அது தவறாக தெரிந்தது. நீங்கள் சொல்லும்பொழுது சரியாக இருக்கிறது. ஆனால், ஏன் நீங்கள் இதுகுறித்து விளக்கம் எதுவும் கொடுக்கவில்லை?" எனக் கேட்டார். உண்மையில் அதற்கான பதிலை அவரிடம் சொல்லிவிட்டேன். இருப்பினும் இங்கே சொல்லவும் கடமைப் படுகிறேன்.
"நான் ஒரு பதிவு இடுகிறேன் எனில், அதை என்ன சூழ்நிலையில், என்ன மனநிலையில், என்ன மாதிரியான கண்ணோட்டத்தில் எழுதி இருப்பேன் என்ற எண்ணம் எவருக்கும் இல்லை. நான் இதை சரியாக எழுதி இருந்தாலும் அது தவறாகவே உள்வாங்கப்படுகிறது எனில், இல்லை நீங்கள் இதை தவறாக புரிந்து கொண்டீர்கள் என விளக்கம் கொடுப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. புதிதாக திருமணமானவர்கள் அதிகமாக பேசிக்கொண்டிருப்பார்கள், காலப்போக்கில்,"என்ன என்றால் என்ன" என்ற இடத்தில் அவர்களது உரையாடல் நின்றுவிடும். போலவேதான் நானும் மாறிவிட்டேன். குறிப்பாக, அந்த முருகன் பதிவுக்குப்பின். என்னுடைய நிலைப்பாடு என்ன என்ற கேள்வியை எவரும் கேட்க தயாராக இல்லை எனும்பொழுது, வலுக்கட்டாயமாக,"இல்லை நான் இதை இப்படி எழுதவில்லை" என நிரூபிக்க நான் தயாராக இல்லை. உங்கள் கண்களுக்கு நான் கொலைக் குற்றம் செய்தவனாக தெரிந்தால், தெரியட்டுமே. எனக்கு தெரியுமல்லவா? நான் எப்படி என்று?. ஆகையால், இனி விளக்கம் கொடுக்க தயாராக இல்லை. புரிந்தவர்கள் புரிந்துகொள்ளுங்கள். வெறுப்பவர்கள்,"கிறுக்கன் கிறுக்குகிறான்" என நினைத்துக் கொள்ளுங்கள். ஆதரிப்பவர்கள் ஆதரியுங்கள். அது முழுக்க முழுக்க உங்களின் விருப்பம். இதை நீங்கள் இப்படி புரிந்துகொள்ள வேண்டும் என சொல்வதற்கு நான் யார்? என்னை நீ ஏன் இப்படி எழுதுகிறாய் எனக் கேட்பதற்கு நீங்கள்தான் யார்? நான் எனக்கு தோன்றுபவைகளை எழுதுகிறேன். நீங்கள் உங்களுக்கு தோன்றுபவகளை கமெண்ட் செய்யுங்கள். டைப் செய்ய கட்டைவிரல் வலித்தால் கடந்து செல்லுங்கள்." இன்றைய தேதிக்கு இதுதான் என் நிலைப்பாடு.
இந்த நிலைபாட்டிற்கு வர உங்களுக்கு பல ஆண்டுகள் ஆகலாம். இழப்புகள் பெரியதாக இருக்கும். பிடித்த மனிதர்கள், பிடித்த விஷயங்கள், அழகான நிமிடங்கள் என பலவற்றை இழக்க நேரிடும். ஆனால், அதற்குப்பின் கிடைக்கும் சுதந்திரம் விலைமதிப்பற்றது. அதை புரிந்துகொள்ள யாரும் இல்லை.
நான் எதையாவது எழுதிவிட்டால் இதை இப்படி எழுதாதே, அப்படி எழுதாதே, எனக் கூவுபவர்கள் அவர்களுக்கு எப்படி பிடித்திருக்கிறதோ அப்படி எழுதிக்கொள்ள வேண்டியதுதானே? அவர்களால் முடியாது. என்னைப்போலவே பதிவுகள் இடும் சில இன்ஸ்ட்டாகிராம் பக்கங்களும் என்னுடைய பதிவுகளை அப்படியே காப்பி செய்து அல்லது அதே சாயலில் அப்படித்தான் பதிவிடுவார்களே ஒழிய அவர்களுக்கென ஒரு தனி எழுத்து நடையை அவர்களால் உருவாக்க இயலாது. இதுதான் நிஜ வாழ்விலும் நடக்கிறது. இங்கே நான் குறிப்பிட்ட சில விடயங்களை உங்கள் நிஜ வாழ்வில் நடக்கும் விடயங்களுடன் பொறுத்திப் பாருங்களேன். புரியும். அவர்களால் இயலாத ஒரு விடயத்தை என்னை வைத்து நிறைவேற்றுக் கொள்ள நினைக்கும் இந்த மனித எண்ணம் கேவலமானதுதான். மனிதன் கேவலமானவன்தான்.
இதற்குப்பின் பொய். தனக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் எனில் நினைத்த மாத்திரத்தில், நினைத்து நினைத்து பொய் பேசுவது. எப்படி நா கூசாமல் பொய் பேசுகிறார்கள் என எனக்கு புரிந்ததே இல்லை. உண்மை பேசுவதில் என்ன உங்களுக்கு அவ்வளவு கஷ்டம்? அப்படி பொய்கள் பேசி அந்த காரியத்தை சாதித்து விடுவதில் ஆனந்தம் அடையக்கூடாது. அறுவறுப்பு அடைய வேண்டும். ஒரு உண்மையை சொல்வதினால் பல பின்விளைவுகள் ஏற்படும் என பயப்படுகிறாய் எனில் முன்னால் நீ செய்த காரியங்கள் தவறு என்றுதானே அர்த்தம்? அதை மீண்டும் செய்யாமல் இருக்க எத்தனிக்காமல், அதை மறைத்து மீண்டும் அதே தவறை செய்ய நினைப்பது கேவலமான செயல் அல்லவா?
இன்னும் பல விடயங்களைப் பற்றி நான் இதில் எழுதவில்லை. இதனால் இவர்கள் மாறிவிடுவார்களா என என்னை நானே கேட்டுக் கொள்கிறேன். மாட்டார்கள் என்பதுதான் பதிலும். சிறியதாக ஒரு விடயத்தை மட்டும் சுருக்கமாக சொல்ல நினைக்கிறேன்.
எனக்கு தனிப்பட்ட அரட்டையில் மெசேஜ் அனுப்பும் பலர், இரண்டு மூன்று மெசேஜ்களுக்கு மேல் பேச மாட்டார்கள். குறிப்பாக பெண்கள். நானும் பேசமாட்டேன். ஆனால் சிறிது நாட்களுக்குப் பின்,"எனக்கு மெசேஜ் அனுப்புவீர்கள் என எதிர்பார்த்தேன்" என்ற ரிப்ளை வரும்.
நான் ஏன் உங்களுக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும்? நீங்கள் என்னுடைய பதிவுகளை பார்த்து என்னிடம் பேச வேண்டும் என நினைக்கிறீர்கள். உங்களுடைய எண்ணத்தையும் முயற்சியையும் மதித்து நான் உங்களுக்கு பதில் அனுப்புகிறேன். என்னுடைய பதிவுகளால் என்னிடம் பேசுகிறீர்கள் என்பது உங்களுக்கு ஒரு காரணம். எனக்கு என்ன காரணம் இருக்கிறது? நீங்கள் பெண்கள் என்பதனால் நான், நானாக வந்து பேச வேண்டும் என நினைக்கிறீர்களா? அப்படி நானாக வந்து பேசினாலும் எனக்கு என்ன கிடைத்துவிடும்? அப்படி கிடைத்தாலும் அது எனக்கு தேவையான ஒன்றா? அது கிடைப்பதற்கு நான் பணயம் வைப்பது என்னுடைய சுதந்திரத்தை.
உதாரணமாக, நான் ஒரு பெண்ணிடம் பேச நினைக்கிறேன் என வைத்துக் கொள்வோம். அவள்மீது எனக்கு உடல்ரீதியான ஈர்ப்பு இருக்கிறது எனவும் வைத்துக் கொள்வோம். நான் அதற்காக நாள்கணக்கில் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருக்க வேண்டும். மேற்கத்திய கலாச்சாரமெல்லாம் இன்னும் இங்கே வரவில்லை. வா, உடனே உடலுறவு கொள்ளலாம் என்பது. பேசி பேசி பேசி பேசி கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் மனதை மாற்றி, திருட்டுத்தனமாக உடலுறவு வைத்துக் கொண்டு, அதற்குப்பின் அதைக் காப்பாற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும். அது அவசியமற்றது.
நான், ஆண். எனக்கும் உணர்ச்சிகள் இருக்கும். விலைமாதரிடம் 2000 ரூபாய் கொடுத்தால் முடிய வேண்டிய ஒரு அற்ப விடயத்தை நான் ஏன் மாதக்கணக்கில் என்னுடைய நேரத்தை செலவு செய்து செய்ய வேண்டும்? என்னுடைய நேரமும், சிந்தனைகளும் எல்லாமே மாற்றம் ஏற்படும். அவர்கள் சொல்வதை கேட்டே ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்குள்ளும் தள்ளப்படுவேன். அது எனக்குத் தேவையில்லை.
பெண் பேசினால் உடலுறவுக்கு மட்டும்தானா என நீங்கள் நினைக்கலாம். நிச்சயமாக இல்லை. ஆனால் நானாக வந்து பேச வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எண்ணம் எங்கிருந்து வருகிறது? ஏன் வர வேண்டும்? உங்களுக்கும் எனக்குமான உறவு என்ன? உங்களையும் என்னையும் இணைக்கும் பாலம் என்ன? இந்த இன்ஸ்ட்டாகிராம் பதிவுகள். அதைப்பற்றி பேச அருமையாக உள்ளது அல்லது இது சரியாக இருப்பதாக தெரியவில்லை என்ற இரு வரிகள் போதுமே.
இல்லை என்னுடைய எண்ணத்தை மாற்ற நினைத்து வாக்குவாதம் செய்ய நினைக்கிறீர்களா? வாக்குவாதம் செய்ய நினைப்பவர்கள் நீங்களாகவே வாக்குவாதத்தை தாராளமாக துவங்கலாமே? நான் உங்களுக்கு பதிலளிக்க மாட்டேன் என எப்பொழுதும் சொன்னதில்லையே?
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இதையும் உங்கள் வாழ்வில் ஒப்பிட்டு பாருங்கள். புரியும். புரியவில்லை என்றாலும் விட்டுவிடுங்கள்.
நான் மனிதர்களை வெறுத்து அவர்களிடமிருந்து விலகி இருப்பதை நிறுத்தப் போவதில்லை.
- எழுத்தாளுமை இக்ரிஸ் (12/04/2025)
கருத்துகள்
கருத்துரையிடுக