கடந்த திசம்பர் மாதத்தில் இருந்து இஸ்ட்டாகிராமில் நான் ஒரு மாதிரியாக வலம் வந்து கொண்டிருக்கிறேன்.
ஒரு மாதிரி என்பது உண்மையில் ஒரு மாதிரி. நான் ஏதோ ஒரு விரக்தியில் வன்மமாக எழுதிய ஒரு பதிவு வைரலாகிப் போக, அதே போன்ற வன்மமிகு பதிவுகளுடன் உலாவ ஆரம்பித்துவிட்டேன்.
உண்மையில் இது ஆரோக்கியானதா என கேட்டால், சொல்கிறேன். அதற்குமுன்,
எல்லாவற்றிற்கும் முன்பாக நான் ஏன் எனது தனிப்பட்ட தகவல்களை வெளியிட விரும்பவில்லை என்பதை பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன்.
நான் நெட்டையா குட்டையா, கருப்பா வெள்ளையா, ஒல்லியா குண்டா, இவ்வளவு ஏன்? ஆணா, பெண்ணா என்பதுகூட பலருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. நான் தெரியப்படுத்த விரும்பவில்லை.
பயப்படுகிறேனா? தாழ்வு மனப்பான்மையா? இதுபோன்ற பல கேள்விகள் நேரடியாக எழுந்து இருக்கின்றன. உண்மை அதுவல்ல.
கால் ஆஃப் ட்யூட்டியில் கோஸ்ட் என்று ஒரு கேரக்டர் இருக்கும். கடைசிவரை அந்த கோஸ்ட் யார்? என்ன? பெயர்? ஊர்? என எதுவும் தெரியாது. ஆனால் கோஸ்ட் என்றவுடன் அனைவரும் பதைபதைப்பனர். அதுதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்.
இரண்டாவது, நான் எழுதுவதைப்போல என்னால் நடந்துகொள்ள முடியுமா எனில் நிச்சயமாக முடியும். அதற்கு கேப்பபிளான ஆள்தான் நான். ஆனால் என்னை பார்த்த மாத்திரத்தில் அதை புரிந்துகொண்டு, இவனால் முடியும். நம்மால் முடியாது என்ற தாழ்வு மனப்பான்மை யாருக்கும் வந்துவிடக்கூடாது. போலவே என்னுடைய மொத்த ஃபாலோவர்களில் 8 சதவிகிதம் பெண்கள். அவர்கள் என்னைப்பார்த்து இன்ஸ்பையர் ஆவதைவிட வெறும் என்னுடைய எழுத்தில் இன்ஸ்பையர் ஆவதை நான் பெருமையாக கருதுவேன்.
தன்னிலை விளக்கங்கள் முடிந்தது.
எப்பொழுதும் எனக்கு மனிதர்களிடம் பழகுவது பிடிக்கும். குறிப்பாக, புதுப்புது மனிதர்களிடம். ஒவ்வொருவரின் கதையும் ஒவ்வொரு அனுபவம். வாழ்வில் நான் கண்டறிந்திடாத கேட்டறிந்திடாத கதைகள், வாழ்க்கை முறைகள், மனிதர்கள், அவர்களின் குணங்கள் இவையெல்லாம் நாம் பழகும் புதுப்புது மனிதர்களிடமிருந்து தெரிந்துகொள்ளலாம். இன்னும் சரியாக சொல்லப்போனால், ஒரு வயதானவரிடம் உட்கார்ந்து பேசினால் நூற்றி ஐம்பது புத்தகங்கள் படிப்பதற்கு சமம்.
இங்கே, நான் எழுத ஆரம்பித்தற்கான நோக்கம் வேறு ஒன்றாக இருந்தது. இப்பொழுது அது ஒன்றாக மாறிவிட்டது. இருந்தாலும் அதை விருப்பத்துடன் செய்து கொண்டிருக்கிறேன். சரியா தவறா எனக்கேட்டால், என்னுடைய எழுத்துக்கள் பலருக்கு உதவி செய்திருக்கிறது. நான் செய்த சில மெசேஜ்கள் சிலரை தற்கொலையிலிருந்து காத்திருக்கிறது. உலகின் எங்கோ ஓர் முலையில் பேச ஆள் இல்லாமல் இருக்கும் ஒருவரின் மௌனக்குரலுக்கு, மரண ஓலத்திற்கு நான் செவிசாய்த்திருக்கிறேன். இந்த இணையம், இந்த வகையில் அற்புதமானது.
கடுகளவு ஃபாலோவர்களையும், கடலளவு எதிரிகளையும் சம்பாதித்து வைத்தபடி இந்த பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறேன். ஏதோ ஒரு வகையில் இது எனக்கும் உதவுகிறது. உங்கள் சோகத்திற்கு முன் என் சோகம் பெரியதாக இருக்காது என்பதும் ஒரு காரணமாக இருந்தாலும் பேசினால் மனம் ஆறிவிடும். பேச ஆள் இல்லாமல் தனிமையை விரும்பி ஏற்காமல் வலுக்கட்டாயமாக அதற்குள் தள்ளப்பட்டிருக்கும் பலருடன் இணைந்து பயணிக்கிறேன்.
என்னுடைய பதிவுகளில் என்ன பிரச்சனை என்றால் நான் சொல்ல வருவதில், நான் என்ன சொல்ல வருகிறேன் என புரிந்தவர்கள் சிலரே என்பதுதான். நான் லேயரிங் செய்து எழுதுவேன். நேரடியாக சொல்வதைக் காட்டிலும் லேயரிங் அழகானது. அதை புரிந்துகொள்ளும் விதம்தான் தவறாகிறது. ஒரு விஷயத்தை நான் எப்படி எழுதுகிறேனோ அப்படியே அதை என் கோணத்தில் இருந்து பார்த்தால் அது சரியாக இருக்கும். சுலபமாக சொல்ல வேண்டுமெனில், இதை நான் ஏன் இப்படி எழுதி இருக்கிறேன் என்ற கேள்வி யாரிடமும் இல்லை. அதனாலேயே நானும் உங்களுக்கு பிடித்தாற்போல புரிந்துகொள்ளுங்கள் என்று விட்டுவிடுகிறேன்.
வன்முறையாக வன்மமாக எழுதி இருக்கிறேன் எனில் அந்த வன்முறைக்குப் பின் என்ன காரணம் இருக்கிறது என கேட்பார் எவரும் இலர். கேட்காமல் சொல்ல நானும் தயாராக இல்லை. இவ்வளவுதான் எதிர்ப்புகளுக்கு காரணம்.
பதிவின் இரண்டாம் பாகம் முடிந்தது.
அடுத்ததாக நான் இங்கே சந்தித்த மனிதர்கள். இங்கே நான் எதிர்பார்க்காத வகையில் பலரிடம் பேசுவதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. அவர்களின் கூட பழகும், இன்னும் சொல்லப்போனால் அவர்களின் வீட்டில் இருப்பவர்களுக்கு கூட தெரியாத பல விஷயங்களை என்னிடம் பகிர்ந்து கொள்வர். பல கதைகளை பல கோணங்களில் கேட்டிருக்கிறேன். கேட்டுக் கொண்டிருக்கிறேன். கேட்பேன்.
மனிதனுக்கு ஒரு முகமூடியை கொடு அவன் உண்மையான முகத்தை பார்ப்பாய் என பேட்மேன் படத்தில் ஜோக்கர் கதாப்பாத்திரம் ஒரு வசனத்தை சொல்வதாக ஒரு சித்தரிப்பு காட்சி இருக்கும். அது உண்மை. இங்கே பலரும் உண்மையாக வாழ்வதில்லை. ஏதோ ஒன்று தடுத்துக் கொண்டே இருக்கிறது. சமுகம், விரும்புபவர்கள், நண்பர்கள், பல நேரங்களில் குடும்பம். அவர்கள் குறைந்தபட்சமாக என்னிடம் அவர்களின் உண்மையான முகத்தை, உணர்வுகளை, வலியை பகிர்ந்து கொள்வதை நினைக்கும்பொழுது.. ஒரு தெரபிஸ்ட்டாக உணர்கிறேன். இனிமேல் பேசுவதற்கு 1000, கூட சேர்ந்து அழுவதற்கு 2000 என சார்ஜ் செய்யலாம் என்ற எண்ணம்கூட வந்துவிட்டது என்றால் பாருங்களேன்.
இன்னும் சிலர் நான் யார் என தெரிந்து கொள்வதற்காக மட்டுமே என்னிடம் பேசுவார்கள். அவர்களிடமிருந்து விலகியே இருக்கிறேன். ஒரு நாள் நான் நிச்சயமாக வெளியே வருவேன். அந்த நாள்..
- எழுத்தாளுமை இக்ரிஸ் (05/04/2025)
Congratulations
பதிலளிநீக்கு