முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என் காதல்கள் - கேள்விகளும் பதில்களும்

1) இருவரையும் எங்கே சந்தித்தீர்கள்?

இங்கேதான். இன்ஸ்ட்டாகிராமில். ஒருவர் 4 மாதங்களாக இருந்தார். இன்னொருவர் இரண்டு மாதங்களாக இருந்தார். இரண்டாமவரை காதலித்தது ஒரு மாதமாக.


2) இருவரிடமும் எப்படி சம்மதம் வாங்கினீர்கள்?

நான் காதலில் இருக்கிறேன் என ப்ராட்காஸ்டில் பதிவிட்டது பலருக்கு தெரிந்திருக்கும். அதற்குப்பின் வந்தவர் இரண்டாமவர். இரண்டாமவருக்கு நான் காதலில் இருப்பது தெரியும். முதலாமவரிடம் மறைத்துதான் வைத்திருந்தேன். தெரியும் நேரத்தில் சில பல பிரச்சனைகளை சந்தித்தேன். பின், அவரே அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார்.


3) ஏன் இரண்டு காதல்கள்?

நான் ஏற்கனவே இருந்த காதலில் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்தேன். நிஜ வாழ்விற்கும் இணைய வாழ்விற்கும் இடையே ஒரு மதில் சுவரை எழுப்பி இருந்தேன். அதை சிறிது சிறிதாக உடைவதை உணர்ந்தேன். இணைய வாழ்விற்காக நிஜ வாழ்வையும், நிஜ வாழ்வில் இருந்த சில எனக்கான தருணங்களையும் இழந்துவிடும் சூழ்நிலை உருவாக ஆரம்பித்தது. மன வேதனையில் திரிந்து கொண்டிருந்தபொழுது இரண்டாமவள் ஆறுதலாக வந்தாள். ஆனால், எடுத்த எடுப்பில் நான் சம்மதம் தெரிவிக்கவில்லை. முடிந்த அளவிற்கு அவளை என்னிடம் இருந்து விலக்கியே வைத்திருக்க முயன்றேன். முடியவில்லை.

சுலபமாக சொல்ல வேண்டும் எனில், அடித்த கைகள் அணைத்தே ஆக வேண்டும். துயரமாக்கும் வார்த்தை வீசும் வாய், சாய தோள் தர வேண்டும். அது கிடைக்கவில்லை. கொடுக்க தயாராக இருந்தவரை நான் தடுக்கவில்லை. அவ்வளவுதான்.


4) உங்களுக்கு காதல் நிச்சயமாய் தேவைப்பட்டதா?

தேவைப்படுகிறது என சரியாக சொல்லிவிட முடியாது. ஆனால், மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் தனக்கே தனக்கென, தன்னை நேசித்திட, தானும் நேசித்திட ஒரு துணை தேவைதானே? எனக்கு ஒரு துணையாக அவர் இருப்பார் என நினைத்தேன். உண்மையில், பலரிடம் பேசிய நான் என்னைப்பற்றி முடிந்த அளவிற்கு வாயை திறந்ததில்லை. ஆனால் அவரிடம் பேசிய இரண்டாம் காலிலேயே அத்தனையையும் சொல்லிவிட்டேன். இரண்டாமவளுக்கு என் பெயர்கூட தெரியாது.


5) இணையத்தில் காதலித்து இருக்கிறீர்கள்? உங்களின் பெயருக்கும் புகழுக்குமாக மட்டுமே உங்களை காதலிக்கிறேன் என சொல்லி இருக்கலாம் அல்லவா?

இருக்கலாம். ஆனால், நான் காதலிக்கதான் புதியவனே ஒழிய, மனிதர்களிடம் பழகுவதில் புதியவன் அல்ல. ஒருவர் பேசும்பொழுதே அவரின் நோக்கம் என்ன என புரிந்துவிடும். இன்னும் சரியாக சொல்லப்போனால், ஒருவர் மெசேஜ் அனுப்ப பயன்படுத்தும் வார்த்தைகளை வைத்தே என்னால் அவரின் மனநிலையை புரிந்துகொள்ள முடியும். அவ்வளவிற்கு மனிதர்களை படித்தவன் நான். என்னால் ஒரு விசயத்தில் மலைபோல நிற்க முடியும். நான் காதலித்த, என்னை காதலித்த இருவரிடமும் என்னுடைய காதலைத் தவிர எவ்வித எதிர்பார்ப்பும் துளியும் இல்லை. இன்னும் சரியாக சொல்லப்போனால், அவர்கள் வாழும் வாழ்க்கைக்கு நானெல்லாம் அருகில்கூட நிற்க முடியாது. ஒருவர், Born with silver spoon. மற்றொருவர், Born with golden spoon. ஆனால் என்னை நம்பி, எனக்காக அணிந்திருக்கும் உடையுடன் வரத் தயாராக இருந்தார்கள். காதல், மூடத்தனமானது.


6) இவ்வளவு வன்முறையாக பதிவுகள் போடுகிறீர்கள். நீங்கள் எப்படி காதல் எல்லாம்? 

ஒரே வரியில் பதில் சொல்ல வேண்டும் எனில்,"நான் கமல்ஹாசன் ரசிகன்." இதற்கு மேலே எதாவது விளக்கம் தேவையா? நிச்சயமாக இன்றைய தலைமுறைக்கு இதன் அர்த்தம் புரியாது. முந்தைய தலைமுறையை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.


7) எப்படி ஒரே நேரத்தில் இரண்டு பேரை காதலித்தீர்கள்? அது தவறு என தோன்றவில்லையா?

1) எனது தாத்தா ஒரு சுதந்திர போராட்ட காலத்து புரட்சி கவிஞர். அவருக்கு 4 மனைவிகள். அவர்களுக்குள் சண்டை வந்து நான் பார்த்ததே இல்லை. எனது தாத்தாவின் மேலே இருந்த பெருங்காதலின் காரணமாக அவர்களுக்குள் அப்படி ஒரு ஒற்றுமை.

2) எனது தாத்தாவின் வழியை பின்பற்றி எழுதுகிறேன். அவரின் வழியில் செல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் முயன்றேன். இரண்டுதான் முடிந்தது. ஆயிரம் இருந்தாலும் என் தாத்தா அளவிற்கு வர முடியவில்லை என்பது வேதனையாக உள்ளது.


8) ஒரு காதல் தோல்வியே தாங்க முடியாமல் வாழலாமா சாகலாமா என சிந்தித்து கொண்டிருக்கிறேன். எப்படி ஒரே நேரத்தில் இரண்டு காதல் தோல்விக்குப் பின்னரும் சகஜமாக பதிவுகள் இடுகிறீர்கள்?

1) நான் இரண்டு வேளை சோறு சாப்பிடுவேன். குறிப்பாக உப்பு போட்டு சாப்பிடுவேன்.

2) நான் நாட்டுக்காக எல்லையில் நின்று சண்டை செய்து கை கால்களை இழக்கவில்லை. வெறும் காதல். சந்தோஷம் துக்கம் சோகம் போன்றதோர் வெறும் உணர்வு. இதற்கெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் என்ன ஆவது? சந்திக்க வேண்டிய பிரச்சனைகள் ஆயிரம் ஆயிரம் காத்துக் கிடக்கின்றன.


9) நீங்கள் உங்கள் காதலிகளுக்கு கடைசியாக என்ன சொன்னீர்கள்? அல்லது எதாவது சொல்ல நினைத்தீர்களா?

1) அவர்கள் இவ்வளவு நாள், அவர்களை சகித்துக் கொண்டு இருந்தது எனக்காக மட்டும்தான். தன் படுக்கையை இன்னொருத்தியிடம் பகிரும் எண்ணமே கொடூரமானது. ஆனால் எனக்காக அதற்கும் தயாராக இருந்தார்கள். அவர்களின் உள்ளம் பரிசுத்தமானது. அவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என விரும்புகிறேன்.

2) என்னையெல்லாம் இத்தனை நாள் தாக்குபிடிப்பார்கள் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. என்னுடைய சைக்கோத்தனத்தை எவ்வளவு காண்பித்தாலும் தாங்கிக் கொண்டார்கள். அவர்களின் மனவலிமையை பாராட்டி கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி பயன்படுத்திய சோப்பு டப்பாவை..


10) மீண்டும் காதல் செய்வீர்களா?

நிச்சயமாக தெரியாது. ஒருவேளை நான் காதலிக்க தகுதியற்றவனோ என்னமோ. அல்லது காதலிக்கப்பட தகுதியற்றவன். பல நேரங்களில் காதலில் இருக்கும்பொழுதே தனிமை கிடைத்தால் பரவாயில்லை என சிந்திப்பேன். காதலிக்கும்முன் என்னுடைய தனிமை உலகின் ஏக போக ராஜாவாக வாழ்ந்து கொண்டிருந்தேன். காதல் எப்படி இருக்கும் என்ற எண்ணமும் அனுபவமும் இல்லாமையில் ஒருவேளை அது அதி அற்புதமான ஒன்றோ என நினைத்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது ஒன்றுக்கு இரண்டு காதல்கள் செய்துவிட்டதால், அது என்ன? எப்படி இருக்கும்? அதன் உணர்வுதான் என்ன? பட்டாம்பூச்சிகள் வயிற்றுக்குள் பறக்கிறதா? இதுபோன்ற நான் அனுபவிக்காத பல உணர்வுகளைப் பற்றிய தெளிவுடைமை இல்லாமல் இருந்தது. இப்பொழுது அதை அனுபவித்து விட்டதால் போதும் என நினைக்கிறேன்.

முடிந்த அளவிற்கு இனிமேல் காதலிக்காமல் இருப்பது உசிதம். ஒருவேளை காதலித்தாலும் இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பற்றி தெரியாத ஒரு பெண்ணைத்தான் காதலிக்க வேண்டும். ஏனெனில் இந்த பக்கத்தில் நான் நீக்கிய பல பதிவுகள் என்னவராக இருந்த முதலாமவரின் அன்புக்கட்டளையின் காரணமாகத்தான். இவர்கள் திட்டுவதை சகித்துக் கொள்ள இயலவில்லை, எனக்காக நீக்கிவிடு என்பாள். அந்த நேரங்களில் எல்லாம் மூளை எதோ ஒரு மூலைக்கு சென்றுவிடும். மனதின் பேச்சைக்கேட்டு தேவையற்ற பலவற்றை செய்துவிட்டேன். இனி இப்படி நிகழாது.

அப்படியென்றால் நீ பயந்து பதிவுகளை நீக்கவில்லையா? என கேட்காதீர்கள். இது வெறும் இன்ஸ்ட்டாகிராம். இங்கே பயப்பட எதுவும் இல்லை. போலவே எதற்கும் அடங்காத நான் அன்புக்கு அடங்கிப்போய் இருந்தேன். என்னுடைய கருத்து சுதந்திரத்தை என் காதலியிடம் கொடுத்து வைத்திருந்தேன். இனி, அது எனக்கே உரித்தானது. போலவே, இவர்கள் திட்ட திட்ட எனது ஈகோ எகிறிவிடும். உங்களை மேலும் மேலும் காயப்படுத்ததான் நினைப்பேனே ஒழிய, ஒருக்காலத்திலும் மருந்து தடவ நினைக்க மாட்டேன். இதுவே யாம்.


இறுதியாக,

போதும் என நினைக்கிறேன். இனி என் காதலைப்பற்றி நான் பேச தயாராக இல்லை. இதற்குமேல் அதைப்பற்றி பேசி க்ரிஞ்ச் செய்யாதீர்கள். நானே கடந்துவிட்டேன். நீங்களும் மறந்துவிடுங்கள்.

நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான்.

எக்காரணத்தை கொண்டும் காதலித்து விடாதீர்கள். ஒருவேளை தப்பித்தவறி காதலித்துவிட்டால், இந்த அண்ட பேரண்டமே வியந்து போகுமளவிற்கு உங்கள் பேரன்பை கொட்டித் தீர்த்துவிடுங்கள்.

முடிந்த அளவிற்கு இழுத்துப் பிடியுங்கள். முடியாவிடில் பறக்க விடுங்கள்.

உண்மையில், எல்லாவற்றையும் இழந்த பின்புதான் உங்களுக்கு எதையும் துணிந்து செய்வதற்கான சுதந்திரம் கிடைக்கும். சுதந்திரம் வேண்டும் என்பதற்காக இழக்காதீர்கள். இழக்கும் சூழ்நிலை வந்தால் தடுக்காதீர்கள்.


- எழுத்தாளுமை இக்ரிஸ் (06/05/2025)

கருத்துகள்

  1. அனைத்து பதில்களும் அற்புதமாக இருந்தது , மீண்டும் காதலிக்கலாம் தவறில்லை ஆனால் நம் சுதந்திரத்தை இழந்து விடக்கூடாது அதுவும் கவனம் 🫂🫂🫂

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பகவத் கீதை - சர்ச்சையும் விளக்கமும்.

கடந்த சில நாட்களுக்கு முன் பகவத் கீதையில் சொல்லப்பட்ட,"கடமையை செய் பலனை எதிர்பாராதே" என்ற வசனத்தை மேற்கோளிட்டு ஒரு பதிவு இட்டிருந்தேன். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலவே எதிர்ப்புகளும் கிளம்பியது. அதைப்பற்றிய ஒரு விரிவு பார்வைதான் இந்த பதிவு. முதலில் கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பது மாபெரும் மூடத்தனம். இங்கு கடமை என்பதை நாம் பல விதத்தில் பொருத்தலாம். எதாவது ஒரு உறவின் வாயிலாகவோ அல்லது பிறருக்கும் செய்யும் உதவி வாயிலாகவே அல்லது தொழில்/வேலை ரீதியாகவோ எப்படி வேண்டுமானாலும் கடமை என்பதை பொருத்தலாம். இதில் எதிலும் நமக்கு யாதொரு பலனும் இல்லை என்றால் அதை எப்படி செய்வீர்கள்? உதாரணமாக, கோவிலுக்கு செல்வது புண்ணியம் அல்லது நினைத்தது நடக்கும் அல்லது சொர்க்கத்திற்கு செல்வோம் என்றொரு மூடநம்பிக்கை இல்லை எனில் இந்தியாவில் கோவில்களே இருக்காது. கோவிலுக்கு செல்வது தீங்கானது, சுடுகாட்டை பார்ப்பது போன்றது, பூனை குறுக்கே செல்வது போன்றது என சொல்லப்பட்டிருந்தால் கோவில்கள் என்ற அமைப்புகள் இருந்திருக்கும் என நினைக்கிறீர்களா? நிச்சயமாக இருந்திருக்காது. அதற்கு பின்னால் இருக்கும் அரசியலும், பிரி...

என் பார்வையில் காதல்

எது காதல்? எப்படி காதல்? நீ என்ன புரிந்து வைத்து இருக்கிறாய் காதலைப் பற்றி? உனக்கு என்ன தெரியும் காதலைப்பற்றி? என்றெல்லாம் பல கேள்விகளை சுமந்தபடி, இந்த பதிவை எழுத கடமைப்பட்டு இருக்கிறேன். நான் இன்றைய தேதியில் பார்த்த வகையில், இவர்களுக்கு காதல் என்பது ஒரு பொழுதுபோக்காகவும், தனிமையில் இருந்து தப்பிக்க உதவும் ஒரு வழியாகவும் மட்டுமே இருக்கிறது. நான் ஒரு ஓல்ட் சோல். நான் பார்த்த, நான் பழகிய, நான் கண்டு வியந்த பெரும் காதல்கள் ஏராளம். எ.கா., ஓகே கண்மணி திரைப்படத்தில் எல்லோரும் துல்கர்-நித்யா மேனன் ஜோடியை புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்த பொழுது நான் மட்டும் பிரகாஷ்ராஜ்-லீலா சாம்சன் ஜோடியை -தனியாக, மனதார, எவ்வித நெருடலுமின்றி- கொண்டாடிக் கொண்டிருந்தேன். கவனித்ததுண்டா? வீட்டில் இருக்கும் பெற்றோர்கள் ஆயிரம் முறை ஐ லவ் யூ சொல்லுவதை? மணிக்கொருமுறை ஒருமுறை மிஸ் யூ சொல்லுவதை? நிமிடத்திற்கு நிமிடம் முத்தங்கள் கொடுப்பதை? இது எதுவும் நடக்காது. குறைந்தபட்சம் பிறர் கண்ணில் படும்படி நடக்காது. ஆயிரம் சண்டை, லட்சம் மனஸ்தாபம், கோடி முறை பிரிந்துவிடலாம் என்ற கோபம் இருந்திருக்கும். ஆனால் காலை உணவை டிஃபன் பாக்ஸில் ...

சரியா? (2017 பதிவுகள்)

தலைக்கவசம் அணியுங்கள் என விளம்பரம் செய்யும் அரசு வாகனத்தை சரியாக ஓட்டுங்கள் என்றோ பொறுமையை கையாளுங்கள் என்றோ விளம்பரப்படுத்தாதது சரியா? வீட்டில், அலுவலகத்தில் இருக்கும் குப்பையை வெளியே போட வேண்டும் என சொல்பவர்கள் அதை குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என சொல்லாதது சரியா? பெண்களின் உடையிலும் நடையிலும் நடத்தையிலும் குறை சொல்பவர்கள் தத்தம் மகன்களை சரியாக வளர்க்காதது சரியா? சாதி என்பது தீண்டாமை என தெரிந்தும் சாதி பார்ப்பதில்லை என பெருமை பேசுபவர்கள் சாதி சான்றிதழ் வாங்குவது சரியா? இலவசங்களும் பணமும் வெற்று சலுகைகளும் கொடுத்து நம்மை முட்டாள் ஆக்குக்கிறார்கள் என தெரிந்தும் ஆக்குபவனையே ஆள அனுமதிப்பது சரியா? ஊழல் லஞ்சம் என அரசு அலுவலகங்கள் சாக்கடையாய் இருந்தாலும் அதில் நம் வேலை நடக்க பணத்தை கொட்டுவது சரியா? பள்ளிகளில் வாழ்க்கைக்கு தேவையான எதுவும் இல்லாமல் அசோகர் மரம் நட்டதையும் சோழர்கள் கோவில் கட்டியதையும் பாண்டியர்கள் தமிழை வளர்ததையும் சொல்லித் தருவது சரியா? பள்ளி கடந்து கல்லூரி வந்ததும் என்ன படித்தால் என்ன வேலை கிடைக்கும் வேலை கொடுப்பவனிடம் எப்படி நடந்து கொள்வது என வேலைக்காரர்களை உருவாக்கும் பட்...