முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பயணங்கள்

உங்களுக்கு தெரிந்து சென்ற வாரம் சென்னை சென்றிருந்தேன். சில நாட்களுக்கு முன் திருச்செந்தூர் சென்றிருந்தேன். தனுஷ்கோடி செல்ல வேண்டிய நான் மனது மாறி திருச்செந்தூர் சென்றது அதனால் ஏற்பட்ட கலவரங்கள் உங்களுக்கு தெரிந்திருக்கும். அதற்கு 15 நாட்களுக்குமுன் ஓசூர். அதுவும் ஒரு சர்ச்சையானதை நீவிர் அறிவீர்.

சர்ச்சைகளை விலக்கி வைத்து பார்த்தால் இதில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது நானோர் ஊரோடி. பயணம் செய்வது என்னுடைய பல பொழுதுபோக்குகளில் ஒன்று. பொழுதுபோக்கு என்று சொல்வதைவிட என் மனநலத்திற்கான சிகிச்சை எனலாம்.

ஒவ்வொருவருக்கும் ஒரு தேடல், ஒரு தேவை, ஒரு தப்பிக்கும் வழி தேவைப்படும். அதைப்பற்றி, எஸ்கேப்பிஸம் என்ற ப்ளாக் பதிவில் விளாவரியாக எழுதி இருப்பேன். என்னை ஒப்பிட்டு சொல்லுவோமேயானால்.,

எனக்கு சினிமா, புத்தகம், பாடல், அனிமே, வெப் சீரிஸ், டிவி சீரிஸ், மாங்கா, காமிக்ஸ், சில நேரங்களில் அரசியல், பயணம், வெற்று உரையாடல்கள், மது அருந்துதல் என எக்கச்சக்க தப்பிக்கும் வழிகளை வைத்திருக்கிறேன். இத்தனையும் வைத்திருக்கிறாயே? எப்படி வாழ்க்கையை வாழுகிறாய் என நீங்கள் கேட்கலாம். வாழ்க்கையே வேண்டாம் என்றுதானே இத்தனையும். வாழ்க்கையை பற்றி கூடிய விரைவில் ஒரு ப்ளாக் பதிவு வரும்.

எதற்கு இத்தனையும் என கேட்டீர்கள் எனில் என்னை பொறுத்தவரையில் மனித மூளைக்கு ஏதாவது வேலை கொடுக்காமல் விட்டுவிட்டால் ஒன்று யார் உணவில் மண்ணள்ளி கொட்டலாம் என்றோ அல்லது நம் தலையில் நாமே எப்படி மண்ணள்ளி கொட்டிக் கொள்வது எப்படி என்றோ சிந்திக்க ஆரம்பித்துவிடும். எனவே, அதை பரபரப்பாகவே வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

ஒட்டுமொத்த தப்பிக்கும் வழிகளுக்கும் ஒரே நோக்கம்தான். இருக்கும் நிஜ வாழ்வில் இருந்து ஓடிவிட வேண்டும். ஒன்று உடலளவில் அல்லது மனதளவில். மற்றதெல்லாம் மனதளவில் மட்டுமே செயல்படும் பொழுது, பயணம் மட்டும் உடலளவிலும் மனதளவிலும் செயல்படும்.

அதிகம் தேவையில்லை. கோபம் வந்துவிட்டால் இரு சக்கர வாகனத்தை எடுத்தகொண்டு 5 கி.மீ தூரத்தை கடந்துவிட்டால், கடந்த தூரத்தில் இருந்து சிந்தித்து பார்த்தால் எதற்கு கோவப்பட்டோம் என்பதே மறந்து போய் இருக்கும். கோபம் மட்டுமல்ல, மனவருத்தம், சோகம், டிப்ரஷன் இன்னும் என்னனென்ன நம் மனதை புண்படுத்துபவையாக இருக்கிறதோ அத்தனைக்கும் இந்த பயணம் எனக்கு தெரிந்த வகையில் பெரும் எஸ்கேப்.

பல நேரங்களில் என்னை சுற்றி இருக்கும் மனிதர்களிடம், அவர்களின் சிற்சில நடவடிக்கைகள்கூட எனக்கு வெறுப்பை தந்துவிடும். ஆனால், அதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதாக இல்லை. உதாரணமாக, நன்றாக பேசிக் கொண்டிருந்த ஒருவர் திடீரென முகத்தை திருப்புவார். அங்கே என் தவறு என்ன? அவரின் கோவம் என்ன? என சிந்திக்க ஆரம்பித்தால் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ஒட்டுமொத்த மனித இனத்திடமிருந்து விலகிவிடலாம் எனத் தோன்றும். இன்னும் சற்று நேரம் கடந்தால்.. நான் ஏன் விலக வேண்டும் இவர்கள் இருப்பதால்தானே பிரச்சனை இவர்களை கொன்றுவிட்டால் என்ன எனத் தோன்றும். இவர்களிடமிருந்து என்னை அல்ல, என்னிடமிருந்து அவர்களை காப்பாற்ற இந்த பயணம் பேருதவி.

பல நேரங்களில் வெறுமனே வெற்று வானத்தை வெறித்தபடி வாகனத்தை செலுத்திக் கொண்டிருப்பேன். நேரம் காலமெல்லாம் கணக்கில் இல்லை. எனக்கு அந்த மனஸ்தாபத்தையும் கோவத்தையும் கிரகிக்க வேண்டும், அதுவரை. பல நேரங்களில் பாடல்களை ஒலிக்க விட்டபடி சத்தமாக பாடிக்கொண்டே செல்வேன். பல நேரங்களில் யாரிடமாவது அலைபேசியில் பேசிக்கொண்டு செல்வேன். பல நேரங்களில் கார்களை விரட்டிக் கொண்டு, லாரிகளை முந்திக்கொண்டு, சக பயணிக்கு வழிவிடாமல் வளைந்து வளைந்து என அந்த நேர மனநிலையை வெளிப்படுத்தி விடுவேன்.

சில நேரங்களில் மட்டும் எதுவும் செய்யாமல் பேரமைதியாக வாகனத்தை செலுத்துவேன். அப்படி பயணிக்க துவங்கிவிட்டால் அது நெடுந்தூர பயணமாக அமைந்துவிடும். ஆளரவமற்ற நெடுஞ்சாலையில் 50 கி.மீ வேகத்தை தாண்டாமல் கிட்டத்தட்ட ஒரு முதிர்ச்சி நிலையில், தியான நிலையில் பயணிப்பேன். புட்டத்தில் ஏற்படும் வலிகூட மூளைக்கு எட்டாமல் மரத்துப் போயிருக்கும். இந்த உலகத்திற்கும் எனக்குமான பந்தம் மொத்தமும் அறுந்து போய்விட்டதாய், முடிவிலியாம் பேரண்டத்தின் ஏதோ ஓர் முலையில் நான் தொலைந்து போய்விட்டதாய் ஓர் எண்ணம். உடலும் மனமும் எதையும் சிந்தியாமல், சிந்திக்க அறிவு இடம் கொடாமல் நிலை நிறுத்தும் அந்த பயணத் தருணத்தை வார்த்தைகளால் வடித்துவிட முடியாது.

நான் சென்று சேரும் இடத்தில் இருக்கும் புதுமைகள், புதுமைகள் இல்லை. நான் அங்கே சந்திக்கும் மனிதர்கள், மனிதர்கள் இல்லை. என் நினைவில் எப்பொழுதும் மணம் மாறாமல் தங்கிக் கிடப்பது நான் எங்கு சென்றாலும் அங்கே செல்லும்வரை நான் செய்த பயணம் மட்டுமே. அது ஓர் பெரும் கிளர்ச்சி!

இன்னும் சில, வெகு சில நேரங்களில் மட்டும் மேலே குறிப்பிட்ட எதற்கும் எவ்வித சம்மந்தமும் இன்றி எதாவது கதைகள் சிந்தித்துக் கொண்டே செல்வேன். என்னுடைய முதல் புத்தகத்தை ஒரு பயணத்தில் சிந்தித்தேன் என சொன்னால் அது மிகையாகாது. நான் எந்த மாதிரியான எழுத்தாளன் எனில், நான் சிந்திக்கும்பொழுதே அது முடிவுக்கு வந்துவிடும். அதற்குப்பின் அதில் யாதொரு மாற்றமும் செய்ய மாட்டேன். ரஃப் காப்பி, ட்ராஃப்ட், பைனல் காப்பி என்றெல்லாம் எனக்கு எதுவும் இல்லை. சிந்திப்பேன், எழுதுவேன், பிழைகளை மட்டும் திருத்துவேன், அவ்வளவுதான். அந்த அளவு ஓவர்திங்கிங் வியாதி உள்ள ஒருவன் நான். இப்படியும் ஒருவன் இருக்கிறானா என நீங்கள் தெரிந்துகொண்டு அதை கடைபிடிக்க நினைக்காதீர்கள். என்னைப்போல ஒருவனாக வாழ்வது கடினம். வாழ்வில் இருந்து ஓடிக் கொண்டே இருப்பது வாழ்வில்லை, அது நரகம்.


- எழுத்தாளுமை இக்ரிஸ் (17/05/2025)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பகவத் கீதை - சர்ச்சையும் விளக்கமும்.

கடந்த சில நாட்களுக்கு முன் பகவத் கீதையில் சொல்லப்பட்ட,"கடமையை செய் பலனை எதிர்பாராதே" என்ற வசனத்தை மேற்கோளிட்டு ஒரு பதிவு இட்டிருந்தேன். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலவே எதிர்ப்புகளும் கிளம்பியது. அதைப்பற்றிய ஒரு விரிவு பார்வைதான் இந்த பதிவு. முதலில் கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பது மாபெரும் மூடத்தனம். இங்கு கடமை என்பதை நாம் பல விதத்தில் பொருத்தலாம். எதாவது ஒரு உறவின் வாயிலாகவோ அல்லது பிறருக்கும் செய்யும் உதவி வாயிலாகவே அல்லது தொழில்/வேலை ரீதியாகவோ எப்படி வேண்டுமானாலும் கடமை என்பதை பொருத்தலாம். இதில் எதிலும் நமக்கு யாதொரு பலனும் இல்லை என்றால் அதை எப்படி செய்வீர்கள்? உதாரணமாக, கோவிலுக்கு செல்வது புண்ணியம் அல்லது நினைத்தது நடக்கும் அல்லது சொர்க்கத்திற்கு செல்வோம் என்றொரு மூடநம்பிக்கை இல்லை எனில் இந்தியாவில் கோவில்களே இருக்காது. கோவிலுக்கு செல்வது தீங்கானது, சுடுகாட்டை பார்ப்பது போன்றது, பூனை குறுக்கே செல்வது போன்றது என சொல்லப்பட்டிருந்தால் கோவில்கள் என்ற அமைப்புகள் இருந்திருக்கும் என நினைக்கிறீர்களா? நிச்சயமாக இருந்திருக்காது. அதற்கு பின்னால் இருக்கும் அரசியலும், பிரி...

என் பார்வையில் காதல்

எது காதல்? எப்படி காதல்? நீ என்ன புரிந்து வைத்து இருக்கிறாய் காதலைப் பற்றி? உனக்கு என்ன தெரியும் காதலைப்பற்றி? என்றெல்லாம் பல கேள்விகளை சுமந்தபடி, இந்த பதிவை எழுத கடமைப்பட்டு இருக்கிறேன். நான் இன்றைய தேதியில் பார்த்த வகையில், இவர்களுக்கு காதல் என்பது ஒரு பொழுதுபோக்காகவும், தனிமையில் இருந்து தப்பிக்க உதவும் ஒரு வழியாகவும் மட்டுமே இருக்கிறது. நான் ஒரு ஓல்ட் சோல். நான் பார்த்த, நான் பழகிய, நான் கண்டு வியந்த பெரும் காதல்கள் ஏராளம். எ.கா., ஓகே கண்மணி திரைப்படத்தில் எல்லோரும் துல்கர்-நித்யா மேனன் ஜோடியை புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்த பொழுது நான் மட்டும் பிரகாஷ்ராஜ்-லீலா சாம்சன் ஜோடியை -தனியாக, மனதார, எவ்வித நெருடலுமின்றி- கொண்டாடிக் கொண்டிருந்தேன். கவனித்ததுண்டா? வீட்டில் இருக்கும் பெற்றோர்கள் ஆயிரம் முறை ஐ லவ் யூ சொல்லுவதை? மணிக்கொருமுறை ஒருமுறை மிஸ் யூ சொல்லுவதை? நிமிடத்திற்கு நிமிடம் முத்தங்கள் கொடுப்பதை? இது எதுவும் நடக்காது. குறைந்தபட்சம் பிறர் கண்ணில் படும்படி நடக்காது. ஆயிரம் சண்டை, லட்சம் மனஸ்தாபம், கோடி முறை பிரிந்துவிடலாம் என்ற கோபம் இருந்திருக்கும். ஆனால் காலை உணவை டிஃபன் பாக்ஸில் ...

சரியா? (2017 பதிவுகள்)

தலைக்கவசம் அணியுங்கள் என விளம்பரம் செய்யும் அரசு வாகனத்தை சரியாக ஓட்டுங்கள் என்றோ பொறுமையை கையாளுங்கள் என்றோ விளம்பரப்படுத்தாதது சரியா? வீட்டில், அலுவலகத்தில் இருக்கும் குப்பையை வெளியே போட வேண்டும் என சொல்பவர்கள் அதை குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என சொல்லாதது சரியா? பெண்களின் உடையிலும் நடையிலும் நடத்தையிலும் குறை சொல்பவர்கள் தத்தம் மகன்களை சரியாக வளர்க்காதது சரியா? சாதி என்பது தீண்டாமை என தெரிந்தும் சாதி பார்ப்பதில்லை என பெருமை பேசுபவர்கள் சாதி சான்றிதழ் வாங்குவது சரியா? இலவசங்களும் பணமும் வெற்று சலுகைகளும் கொடுத்து நம்மை முட்டாள் ஆக்குக்கிறார்கள் என தெரிந்தும் ஆக்குபவனையே ஆள அனுமதிப்பது சரியா? ஊழல் லஞ்சம் என அரசு அலுவலகங்கள் சாக்கடையாய் இருந்தாலும் அதில் நம் வேலை நடக்க பணத்தை கொட்டுவது சரியா? பள்ளிகளில் வாழ்க்கைக்கு தேவையான எதுவும் இல்லாமல் அசோகர் மரம் நட்டதையும் சோழர்கள் கோவில் கட்டியதையும் பாண்டியர்கள் தமிழை வளர்ததையும் சொல்லித் தருவது சரியா? பள்ளி கடந்து கல்லூரி வந்ததும் என்ன படித்தால் என்ன வேலை கிடைக்கும் வேலை கொடுப்பவனிடம் எப்படி நடந்து கொள்வது என வேலைக்காரர்களை உருவாக்கும் பட்...