அண்ட பேரண்டத்தில் இன்றைய தேதியில் பூமியில் மட்டும்தான் மனிதன் வாழ முடியும், வாழ்கிறான் என்பது கோட்பாடாக இருக்கிறது. அது உண்மையாக இருக்கலாம். இல்லாமலும் போகலாம். அப்படி அதுவே உண்மையாக இருக்கும் பட்சத்தில் அம்மனிதனால் ஆகக்கூடிய காரியங்கள் என எத்தனை எத்தனையோ இருக்கின்றன. பிரபஞ்சத்தை துலாவி பார்ப்பதில் துவங்கி அணுக்களை பிளந்து பார்க்கும்வரை மனிதன் தன்னால் முடியாது அல்லது இவ்வளவுதான் முடிந்திருக்கிறது என இருக்கும் ஒரு வரையரையை மீறி முயன்று அதில் தோல்வியோ வெற்றியோ எதையாவது ஒன்றை செய்துகொண்டேதான் இருக்கிறான். புதிய கண்டுபிடிப்பாகட்டும் அல்லது புதிய அழிவு முறையாகட்டும் ஆக்கலும் அழித்தலுமாய் மனிதன் முயன்று பார்க்காத விசயமென யாதொன்றும் இன்றுவரை இருப்பதாக தெரியவில்லை. ஒவ்வொரு முயற்சியிலும் ஏகபோக சக மனிதர்களின் வெறுப்பையும் எதிர்ப்பையும் சம்பாதிக்காமலும் அவன் இருப்பதில்லை. இருந்தும், பெரும்பாலான மனிதர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு என சொல்வோமேயானால் அது சினிமா. புகைப்படங்களை நகர்த்தி அதை காணொளியாக மாற்ற முடியும் என ஒருவன் நிரூபித்தான். அங்கே துவங்கியது மனிதனின் கற்பனையும், கவியும், காவியமும்.
புத்தகங்களைப் பற்றி அனைவருக்கும் தெரியும். தெரியவில்லை எனில் தெரிந்து கொள்ளுங்கள். புத்தகங்கள் எப்பொழுதும் கற்பனைக்கு அப்பாற்பட்டு இருந்தாலும், பல நேரங்களில் வாழ்க்கைக்கு உதவும் வகையில்தான் இருக்கும். ஒரு மனிதன் ஒரு விசயத்தை ஒரு கோணத்தில் சிந்திக்கிறான் எனில் அவனை அதே விசயத்தை பல கோணங்களில் சிந்திக்க வைப்பதுதான் புத்தகங்கள். அதனாலேயே புத்தக வாசிப்பு ஒரு பெரும் போதை. மட்டுமின்றி, வாசிப்பவனை உறக்கத்தில் தள்ளிவிடும். உறங்குவது அவன் தவறல்ல, அவனை சிந்திக்க தூண்டிவிடும் புத்தகங்கள் அவனது மூளையை சுறுசுறுப்பாக்கிவிடும். இதுவரை ஒன்று இரண்டு என எண்ணிக் கொண்டிருந்த சிறுவனை ஆயிரம் இரண்டாயிரம் என எண்ணச் சொன்னால் தடுமாறி தடம் மாறி தவறாக எண்ணிக்கையை சொல்வதும் எண்ணிக்கையை பாதியிலேயே விடுவதும்தான் சிறுவனால் முடியும். அதேதான் புத்தக வாசிப்பில் நிகழும். கடிவாளம் கட்டப்பட்ட குதிரை திடீரென கடிவாளத்தை அவிழ்த்து விட்டால் என்ன செய்யும்? இரண்டு கண்களும் இருபுறம் நோக்க, திக்கு தெரியாமல் ஓடும். நம் மூளையாலும் பல கோணங்களில் சிந்திக்க முடியும். பள்ளி, கல்லூரி குறிப்பாக சமூகத்தினால் கட்டப்பட்டிருக்கும் கடிவாளத்தினால் நாம் எதையும் சிந்திப்பதில்லை. சிந்திக்க நினைப்பதும் இல்லை. திடீரென சிந்திக்க சொன்னால் நிலை தடுமாறி விடுகிறோம். இதுதான் புத்தகத்தின் உளவியலும், அதன் பிரச்சனையும்.
நாம் சிந்திக்கவும் வேண்டும் ஆனால் நிலை தடுமாறவும் கூடாது என்ற இடத்தில்தான் சினிமா தன்னுடைய சட்டைக் காலரை தூக்கிவிட்டபடி கதவை திறந்துகொண்டு உள்ளே நுழையும். புத்தகத்திற்கும் சினிமாவிற்குமான வித்தியாசத்தை நடிகர் குரு சோமசுந்தரம் ஒரு நேர்காணலில் மிகத்தெளிவாக சொல்லி இருப்பார்.
அவர் கூறியதாவது, "ஒரு குதிரை ஓடி வருவதை சினிமாவில் காண்பிக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். அந்த குதிரை என்ன நிறம்? என்ன உயரம்? எங்கே ஓடி வருகிறது? ஏன் ஓடி வருகிறது? அந்த குதிரையின் மேல் யாராவது உட்கார்ந்து இருக்கிறார்களா? அல்லது விரட்டி வருகிறார்களா? அந்த குதிரை தற்காப்பிற்காக ஓடுகிறதா? அல்லது யாரையாவது விரட்டிச் செல்கிறதா? அந்த குதிரை கடிவாளம் அணிந்திருக்கிறதா? அல்லது இப்பொழுதுதான் பழக்கப் படுத்துகிறார்களா? என்ற இத்தனை கேள்விகளும் நமக்குள் தோன்றும். இந்த கேள்விகளையெல்லாம் சரிகட்டும் விதமாக சினிமாவில் காண்பித்து விடுவார்கள். நம்மை சிந்திக்க விடுவதில்லை. ஆனால் இதுவே புத்தகத்தில் ஒரு குதிரை ஓடி வருகிறது என எழுதி இருந்தால் இந்த கேள்விகளையெல்லாம் நாம் சிந்திப்போம். பதில்களை தேடுவோம். அல்லது நாமாக கற்பனை செய்து கொள்வோம். ஆகவே புத்தகம் சிறந்தது" என்பதுதான் அவரது வாதம் என்றே சொல்லலாம்.
ஆனால் நடைமுறையில், புத்தகங்களை படிக்க அனைவராலும் முடியாது. அதன் விலையில் துவங்கி அதை வாசிக்க நாம் செலவிடும் நேரம் வரை அதன் பிண்ணனியில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. நாளடைவில் புத்தக வாசிப்பு என்பது பணக்காரனின் பொழுதுபோக்காக மாறி வருகிறது. இங்கே நான் பணக்காரன் என குறிப்பிடுவது பணத்தையும் பொருளையும் வைத்திருப்பவனை அல்ல. நேரத்தை வைத்திருப்பவனை. ஏனெனில் இன்றைய தேதியில் தன்னுடைய நேரத்தை தனக்கென வைத்திருப்பவன்தான் பெரும் பணக்காரன்.
அதற்கு குறைந்தபட்ச மாற்றாக இருப்பதுதான் சினிமா என நான் நம்புகிறேன். எல்லா நேரத்திலும் சினிமா வெறும் பொழுதுபோக்காக இருப்பதில்லை. சினிமா பல விசயங்களை கற்றுத் தரும். மனிதர்கள், காதல், நட்பு, குடும்பம், சுற்றம், சுற்றுசூழல், அறிவியல், விஞ்ஞானம், மெய்ஞானம், அடக்குமுறை, முதலாளித்துவம், புரட்சி, வெற்றி, தோல்வி, தோல்வியை கையாளுதல், போராட்டம், கல்வி, அரசியல், வாழ்க்கை நடைமுறை, பணம், பணம் சார்ந்த உளவியல், தொழில், வேலை, பங்குசந்தை, மொழி, மொழிசார் அரசியல், பிரிவினைகள் என பற்பல. இரண்டு ஒரே வயது குழந்தையை எடுத்துக் கொள்வோம். ஒரு குழந்தைக்கு சினிமா என்றால் என்ன என தெரியாமல் பள்ளி, கல்லூரி, மனிதர்கள், சுற்றம் என வளர்க்கிறோம் என வைத்துக் கொள்வோம். இன்னொரு குழந்தைக்கு அவை எதுவும் வேண்டாம். வெறும் சினிமா. சினிமாவை மட்டும் காண்பித்து வளர்க்கிறோம். அடுத்த இருபது ஆண்டுகளில் இருவரில் தலைசிறந்தவனாக யார் இருப்பார்கள்? இந்த கேள்விக்கு கண்களை மூடிக்கொண்டு பதில் சொல்ல வேண்டுமெனில் சினிமா காண்பித்து வளர்க்கப்பட்ட குழந்தைதான் என பதில் சொல்லிவிட முடியும். அதுதான் உண்மையும் கூட.
ஏனெனில், பள்ளி, கல்லூரி, சுற்றம் என வளர்க்கப்பட்ட குழந்தைக்கு அத்தனையும் கட்டுப்பாடு, அத்தனையும் விதிகள், இதை செய் இதை செய்யாதே, இப்படி பேசு இப்படி பேசாதே, இப்படி நடந்துகொள் இப்படி இரு இப்படி வாழ் என அத்தனையும் இன்னொருவர் சொல்வதைக்கேட்டு தலையாட்டும் வாழ்க்கை அவனுடையது. மற்றொரு பக்கம் சினிமா குழந்தை. அவனுக்கு எது சரி, எது தவறு, எதை எங்கே பேச வேண்டும், எங்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது அவனுக்கே தெரிந்திருக்கும். போலவே குறிப்பிட்ட அளவு அறிவு மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும் கல்விக் குழந்தைக்கு வெறுமனே சம்பாதிக்க மட்டும்தான் தெரியும். அவன் ஒரு தலை சிறந்த தொழிலாளியாக வாழ முடியும். ஆனால் கேவலம் அவனுடைய அலுவலகத்தில் நடக்கும் உள் அரசியலைகூட அவனால் எதிர்கொள்ள இயலாது. யார் என்ன சொன்னாலும் தலையசைத்து வாழும் ஒரு அடிமையாகத்தான் வாழ்வான். ஆனால் சினிமா குழந்தை எப்படி இருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.
இது இப்படி இருக்க, நான் ஒரு பெரும் சினிமா ரசிகன். என் வாழ்வில் சினிமா பெரும் பங்கு வகிக்கிறது. எனக்கு கோவமோ வருத்தமோ இந்த சூழ்நிலையை சமாளிக்க முடியாது என்ற கையாளாகாத்தன எண்ணமோ வந்தால் என்னுடைய மனதை குணப்படுத்தும் புள்ளி சினிமாதான். கண்களை மூடிக்கொண்டு சினிமா என்ற கடலில் குதித்து விடுவேன். சிறிது சிறிதாக மூழ்கி மூழ்கி ஆழத்தில் சென்று அழிந்து போய்விடப் போகிறேன் என நினைத்து கண்களை மூடி திறந்தால், அஸ்தமனமாகிய சூரியன் ஆயிரம் கைகளை நீட்டி ஆரவாரமாக உதிப்பதைப் போல மோலோங்கி உயர்ந்து நிற்பேன். அதுவே சினிமாவின் சக்தி என்பதை மறுக்க இயலாது. குளம்பிய குட்டை சிறிது சிறிதாக தெளிவடைவதை என்றாவது பார்த்திருக்கிறீர்களா? நான் அதை உணர்ந்தே இருக்கிறேன். அதுவே சினிமாவின் வெற்றி.
அந்த ஆழ்கடலைப்பற்றி எழுதித் தீராது. நானும் தீர விடுவதாக இல்லை. இது வெறும் துவக்கம்.
- எழுத்தாளுமை இக்ரிஸ். (10/08/2025)
கருத்துகள்
கருத்துரையிடுக