முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எனது புரிதலில் காதல்.

வாழ்வில் ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு காரணம் இருக்கும் என்பதை நாம் உணரும் தருணம் மிக அழகானது. போலவே வலியானதும்கூட.

திசம்பர் 2024 இல் நான் இந்த இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தை ஆரம்பிக்க எனக்கு அப்போது இருந்த ஒரு மனக்கிலேசம் காரணமாக இருந்தது. நான் இதுவரை அதுதான் காரணம் என நினைத்துக் கொண்டும் இருந்தேன். ஆனால் இந்த பக்கத்தின் காரணம் நான் இதுவரை அறிந்துகொள்ளாத ஒரு விசயம் காதல். அதை அறிந்துகொள்வதற்கான பயணம்தான் இது. வாழ்க்கையே பயணம்தானே?

எனக்கு காதல் தோல்விகள் நடந்தவைகள் உங்களுக்கு தெரிந்திருக்கும். இந்த மூன்றாவது காதலைப்பற்றி நிறைய பேசியும் விட்டேன் என்பதனால் உங்களுக்கு சலிப்படைந்திருக்கும் அல்லது உங்களுக்கு ஒருவேளை காதல் தோல்வியாகி இருந்தால் இதை அதனுடன் சேர்த்துவைத்து பெருமூச்சு விட வைத்திருக்கும் அல்லது காதல் தோல்விக்கெல்லாம் கலங்கமாட்டேன் என ப்ராட்காஸ்டில் திமிர்த்தனமாக பதிவுகள் இட்டவன் இன்று இப்படி தொங்கிப்போய் கிடக்கிறான் என நகைப்பை ஏற்படுத்தி இருக்கும். என்னவாகினும், நீங்கள் என்னுடைய ஃபாலோவர்கள். உங்களிடம் நான் என்னுடைய வாழ்வின் சில அங்கங்களை பகிர்ந்துகொள்வதில் தவறொன்றும் இருப்பதாக தெரியவில்லை. என்னுடைய பெயர், ஊர், முகம் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் என்னுடைய வாழ்வின் அத்தனை நிகழ்வுகளிலும் நான் உங்களை வைத்திருக்கிறேன். உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன். என்னுடைய ஊர் பெயர் முகம் தெரிந்த யாருக்கும் எனக்கு இப்படி ஒரு சுதந்திர வாழ்வு இருக்கிறதென தெரியாது. நான் காதலிப்பேனா எனக்கூட தெரியாது. நீங்கள் என் வாழ்வின் ஓர் அங்கம். மிக முக்கிய அங்கம்.

இந்த காதல் தோல்வி புலம்பல் படலத்தின்பொழுது நான் பலரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களை என்னிடம் பேச அனுமதித்தேன் என்றே சொல்லலாம். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல், எந்த ஒரு தனிப்பட்ட தகவல் பகிர்தலும் இல்லாமல் வெறுமனே இந்த காதலைப்பற்றி பேசும் ஒரு இடமாக இன்ஸ்ட்டாகிராம் மாறிவிட்டது. பலரின் வாழ்வில் பல பிரச்சனைகள். ஆனால் எல்லார் வாழ்விலும் பொதுவான பிரச்சனை காதலாக இருந்திருக்கிறது. அதை புரிந்துகொண்டோமா எனக்கேட்டால் இல்லை. அந்த புரிதலுக்குத்தான் இந்த பதிவு. இந்த பதிவிற்கு காரணமாக இருந்த, என்னுடன் உரையாடிய அனைவருக்கும் நன்றி.

நான் என்னை வைத்து இதை எழுத ஆரம்பிக்கிறேன். நான் மூன்றுமுறை காதல் தோல்விக்குள்ளான பொழுதும் ஒருபொழுதும் காதலின்மீது எனக்கு கோவம் வரவில்லை. காதலிகள் மீதும் கோவமில்லை. எனக்கு என்மீது கோவம் வந்தது. நான் என்ன தவறு செய்தேன் என சிந்திக்க வைத்தது. அதுவே பெரிய வெற்றி என்பேன். இங்கேதான் பலர் தோற்றுவிடுகின்றனர்.

காதல் தோல்வியாகிவிட்டால் பொதுவாக அனைவரும் செய்வது, இனி காதலிக்க மாட்டேன் அல்லது காதல் தோல்வியுடனே வாழ்ந்து கொள்கிறேன் அல்லது வீட்டில் பார்ப்பவர்களை திருமணம் செய்து கொள்கிறேன் என்பவைகள்தான். எனக்கு புரியாத ஒரு விசயம் ஏன் காதலை புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறீர்கள்?

இனி காதலே செய்ய மாட்டேன். அது ஏன் எனக்கேட்டால் முன்னாள் காதலரின்மீது நம்பிக்கை இழந்துவிட்டதால். சரி அத்தனை மனிதர்களும் அப்படியே இருந்துவிடுவார்களா என்ன? அல்லது அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என நீங்கள் ஜட்ஜ்மென்ட் செய்கிறீர்களா?

காதல் தோல்வியுடன் வாழ்ந்து கொள்கிறேன். உண்மையில் காதல் தோல்வியுடன் வாழ்வது ஒன்றும் அவ்வளவு மோசமாக இல்லை. நான் இப்பொழுது அப்படித்தானே வாழ்கிறேன். ஆனால் அதற்காக இங்கேயே தங்கிவிட வேண்டுமா என்ன? போலவே சினிமாவில் வரும் பாடல்கள் காதல் தோல்விகளை கோபுர உச்சத்தில் வைத்திருப்பது தவறாக தெரியவில்லையா? போலவே மது அருந்தினால் காதல் தோல்வியால்தான் என்ற கட்டமைப்பு. மது அருந்துதல் என்பது தனி துறை. அதையும் இதையும் குழப்பிக் கொள்ளாதீர்கள். போலவே மதுவை காதலித்து அதற்கு உங்களை அர்ப்பணிப்பது வேறு கதை. காதல் தோல்விக்கு மது நிச்சயமாக தீர்வில்லை.

வீட்டில் பார்ப்பவர்களை திருமணம் செய்து கொள்கிறேன் வகையறா. இருப்பதிலேயே மோசமான ஒன்று இதுதான். உங்களுக்கும் உங்களது பார்ட்னருக்கும் இடையே நீங்கள் மட்டும்தான் இருக்க வேண்டும். அதாவது உங்கள் அறையில் நீங்கள் படுத்து இருக்கும்பொழுது அங்கே தனிமையில் நீங்கள் இருக்க வேண்டும். உங்கள் பிரச்சனைகளை நீங்கள் சரி செய்துகொள்ள வேண்டும். இந்த நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் அது சாத்தியக்குறைவுதான். உங்கள் படுக்கையறை சுற்றி மொத்த குடும்பமும் எப்பொழுதும் உட்கார்ந்து இருக்கும். மன்னிப்பு கேட்பதற்கும், தவறுகளை உணர்வதற்கும், புரிந்துகொள்வதற்குமான இடம் இருப்பதே இல்லை பல திருமணங்களில். திருமணம் செய்துவிட்டோம் என்பதற்காக அத்தனையையும் சகித்துக்கொண்டு வாழும் வாழ்க்கை இருபாலருக்கும் இல்லாமல் இல்லை. ஏன் அப்படி இருக்க வேண்டும்? காதலிக்கலாமே? புரிந்து கொள்ளலாமே? புரிய வைக்க முயலலாமே? சகித்துக்கொள்வதே மேல் என்ற எண்ணத்திற்கு வந்துவிடுகிறார்கள் பலர். இதற்கு காதல் தோல்வியும் ஒரு வகையில் காரணம். காதலர் தோல்வியினால் ஏற்பட்ட பாதிப்பின் வெளிப்பாடு என்றுதான் சொல்ல வேண்டும்.

சரி காதலிக்கிறோம் புரிந்துகொள்ள முயல்கிறோம் மன்னிக்கிறோம் என்றாலும் அதே தவறை மீண்டும் செய்தால் என்ன செய்வது என்ற கேள்வி எழலாம். இங்கே தவறுகள் செய்யாத மனிதரே இல்லை. காதல் திருமணத்தில் நீங்கள் அந்த தவறுகளை சுட்டிக்காட்டவும், அதை உங்கள் இணையர் புரிந்துகொள்வதற்குமான தளம் இருக்கிறது. இவர் என்னுடைய பொறுப்பு என்ற எண்ணம் சிறிதாவது இருக்கும். நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் அது இருக்காது. பெற்றோரின் மேல் பழியை போட்டுவிட்டு கடந்து செல்லும் நிகழ்வுதான் நடக்கிறது. இது சரியா எனக்கேட்டால், தவறுதான். ஆனால் என் தவறில்லை என கை விரிப்பதற்கும், உன் தவறுதான் என சுட்டிக்காட்டுவதற்கும் ஒருவர் இருக்கும் பட்சத்தில் நாம் ஏன் எல்லாவற்றையும் தலையில் தூக்கி வைத்துக் கொள்ளப்போகிறோம்? இது காதலில் நடக்கவே நடக்காதா எனக்கேட்டால், நடக்கும் ஆனால் குறைவாக இருக்கும்.

மூன்று காதல்கள் தோல்வியான நான் காதலின்மீதோ காதலிகள் மீதோ கோவப்படவில்லை. நான் கற்றுக்கொண்டேன். விலைமதிப்பில்லா காதலை. இந்த புரிதலுடனும் தெளிவுடனும் அனுபவத்துடனும் இருக்கும் நான் எதற்காக தனியாக வாழ வேண்டும் என்ற கேள்விக்கு எனக்கு விடை தெரியவில்லை. நன்றாக கிரிக்கெட் விளையாடத் தெரிந்த ஒருவர், விளையாடுவது நிறுத்த நினைப்பானேன்? களம் தானே மாறும், விளையாட்டு ஒன்றுதானே?

அப்படியெனில் நீ உன்னுடைய காதலிகளிடம் கற்றுக்கொண்டு அதை அடுத்து வரப்போகிறவளிடம் பயன்படுத்தப் போகிறாயா? என்ற கேள்வி எழலாம். இதைப்பற்றி பேச என்னுடைய காதலிக்கும் எனக்கும் நடந்த ஓர் நிகழ்வை நினைவுகூற விரும்புகிறேன்.

எங்களுக்குள் பெரும் பிரச்சனைகளும், வாதங்களும், கைகலப்புகளும் நடக்கவில்லை. அவள், நான் அவளுக்கு வேண்டாம் என்ற முடிவு செய்தபின் அவளிடம் பேசி, கெஞ்சி எதுவும் வேலைக்கு ஆகவில்லை எனும்பொழுது நான் சொல்லியது இதுதான். "நான் உனக்காக என்னை, நீ கேட்காமலேயே மாற்றிக்கொண்டேன். இதை மாற்றம் என்று சொல்வதைவிட பரிணாம வளர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும். போனது போகட்டும். என்மீது தவறு. அத்தனைக்கும் நான்தான் காரணம். ஆனால் நான் காதல் என்பதற்கான அர்த்தத்தை உன்னிடம்தான் கற்றுக்கொண்டேன். அதை உணர்ந்திருக்கிறேன். இப்பொழுது அதை கொண்டுபோய் இன்னொருவளுக்கு கொடுப்பது நியாயமாக இருக்காது. அதற்காகவாவது நீ என்னை மறுபரிசீலனை செய்யலாமே?". இதற்கும் அவள் மறுப்புதான் தெரிவித்தாள். நான் கற்றுகொண்டேன் என்பதற்காக அவளிடம் என்னுடைய திறமையை காட்டியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறதா? அவள் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம்தான் இருக்கிறதா? இல்லை.

இப்பொழுது அடுத்து காதலிப்பேனா எனக்கேட்டால் தெரியாது. ஆனால், காதலிப்பதற்கும் காதலிக்கப்படுவதற்கும் காத்திருக்கிறேன் என்பது மட்டும் தெரியும். இந்த வாழ்க்கை அத்தனை அற்புதமானதெல்லாம் இல்லை. அது அற்புதமாக மாற வேண்டுமெனில் நாம் பலவற்றை இழக்க வேண்டி இருக்கும். அதற்காக வாழ்க்கையையே இழந்துவிடக்கூடாது.

- எழுத்தாளுமை இக்ரிஸ் (06/09/2025)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பகவத் கீதை - சர்ச்சையும் விளக்கமும்.

கடந்த சில நாட்களுக்கு முன் பகவத் கீதையில் சொல்லப்பட்ட,"கடமையை செய் பலனை எதிர்பாராதே" என்ற வசனத்தை மேற்கோளிட்டு ஒரு பதிவு இட்டிருந்தேன். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலவே எதிர்ப்புகளும் கிளம்பியது. அதைப்பற்றிய ஒரு விரிவு பார்வைதான் இந்த பதிவு. முதலில் கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பது மாபெரும் மூடத்தனம். இங்கு கடமை என்பதை நாம் பல விதத்தில் பொருத்தலாம். எதாவது ஒரு உறவின் வாயிலாகவோ அல்லது பிறருக்கும் செய்யும் உதவி வாயிலாகவே அல்லது தொழில்/வேலை ரீதியாகவோ எப்படி வேண்டுமானாலும் கடமை என்பதை பொருத்தலாம். இதில் எதிலும் நமக்கு யாதொரு பலனும் இல்லை என்றால் அதை எப்படி செய்வீர்கள்? உதாரணமாக, கோவிலுக்கு செல்வது புண்ணியம் அல்லது நினைத்தது நடக்கும் அல்லது சொர்க்கத்திற்கு செல்வோம் என்றொரு மூடநம்பிக்கை இல்லை எனில் இந்தியாவில் கோவில்களே இருக்காது. கோவிலுக்கு செல்வது தீங்கானது, சுடுகாட்டை பார்ப்பது போன்றது, பூனை குறுக்கே செல்வது போன்றது என சொல்லப்பட்டிருந்தால் கோவில்கள் என்ற அமைப்புகள் இருந்திருக்கும் என நினைக்கிறீர்களா? நிச்சயமாக இருந்திருக்காது. அதற்கு பின்னால் இருக்கும் அரசியலும், பிரி...

என் பார்வையில் காதல்

எது காதல்? எப்படி காதல்? நீ என்ன புரிந்து வைத்து இருக்கிறாய் காதலைப் பற்றி? உனக்கு என்ன தெரியும் காதலைப்பற்றி? என்றெல்லாம் பல கேள்விகளை சுமந்தபடி, இந்த பதிவை எழுத கடமைப்பட்டு இருக்கிறேன். நான் இன்றைய தேதியில் பார்த்த வகையில், இவர்களுக்கு காதல் என்பது ஒரு பொழுதுபோக்காகவும், தனிமையில் இருந்து தப்பிக்க உதவும் ஒரு வழியாகவும் மட்டுமே இருக்கிறது. நான் ஒரு ஓல்ட் சோல். நான் பார்த்த, நான் பழகிய, நான் கண்டு வியந்த பெரும் காதல்கள் ஏராளம். எ.கா., ஓகே கண்மணி திரைப்படத்தில் எல்லோரும் துல்கர்-நித்யா மேனன் ஜோடியை புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்த பொழுது நான் மட்டும் பிரகாஷ்ராஜ்-லீலா சாம்சன் ஜோடியை -தனியாக, மனதார, எவ்வித நெருடலுமின்றி- கொண்டாடிக் கொண்டிருந்தேன். கவனித்ததுண்டா? வீட்டில் இருக்கும் பெற்றோர்கள் ஆயிரம் முறை ஐ லவ் யூ சொல்லுவதை? மணிக்கொருமுறை ஒருமுறை மிஸ் யூ சொல்லுவதை? நிமிடத்திற்கு நிமிடம் முத்தங்கள் கொடுப்பதை? இது எதுவும் நடக்காது. குறைந்தபட்சம் பிறர் கண்ணில் படும்படி நடக்காது. ஆயிரம் சண்டை, லட்சம் மனஸ்தாபம், கோடி முறை பிரிந்துவிடலாம் என்ற கோபம் இருந்திருக்கும். ஆனால் காலை உணவை டிஃபன் பாக்ஸில் ...

சரியா? (2017 பதிவுகள்)

தலைக்கவசம் அணியுங்கள் என விளம்பரம் செய்யும் அரசு வாகனத்தை சரியாக ஓட்டுங்கள் என்றோ பொறுமையை கையாளுங்கள் என்றோ விளம்பரப்படுத்தாதது சரியா? வீட்டில், அலுவலகத்தில் இருக்கும் குப்பையை வெளியே போட வேண்டும் என சொல்பவர்கள் அதை குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என சொல்லாதது சரியா? பெண்களின் உடையிலும் நடையிலும் நடத்தையிலும் குறை சொல்பவர்கள் தத்தம் மகன்களை சரியாக வளர்க்காதது சரியா? சாதி என்பது தீண்டாமை என தெரிந்தும் சாதி பார்ப்பதில்லை என பெருமை பேசுபவர்கள் சாதி சான்றிதழ் வாங்குவது சரியா? இலவசங்களும் பணமும் வெற்று சலுகைகளும் கொடுத்து நம்மை முட்டாள் ஆக்குக்கிறார்கள் என தெரிந்தும் ஆக்குபவனையே ஆள அனுமதிப்பது சரியா? ஊழல் லஞ்சம் என அரசு அலுவலகங்கள் சாக்கடையாய் இருந்தாலும் அதில் நம் வேலை நடக்க பணத்தை கொட்டுவது சரியா? பள்ளிகளில் வாழ்க்கைக்கு தேவையான எதுவும் இல்லாமல் அசோகர் மரம் நட்டதையும் சோழர்கள் கோவில் கட்டியதையும் பாண்டியர்கள் தமிழை வளர்ததையும் சொல்லித் தருவது சரியா? பள்ளி கடந்து கல்லூரி வந்ததும் என்ன படித்தால் என்ன வேலை கிடைக்கும் வேலை கொடுப்பவனிடம் எப்படி நடந்து கொள்வது என வேலைக்காரர்களை உருவாக்கும் பட்...