இதை எங்கெங்கிருந்தோ துவங்க வேண்டும். ஆனால் நான் துவங்கும் அத்துவக்கத்திற்கு ஓர் விளக்கமும் குட்டி கதையும் சொல்ல வேண்டும். சொல்வதில் எனக்கு யாதொரு பிரச்சனையும் இல்லை. ஆனால் படிப்பதில் உங்களுக்கு?
சமீபத்தில் ஓர் சினிமா சேனல் இன்ஸ்ட்டாவில் உருவாக்கி இருந்தேன். சினிமாக்கள் பார்த்து அதைப்பற்றி பகிர்ந்து கொண்டு இருந்தேன். அதை உருவாக்கிய காரணம் என நான் கூறியது,"நான் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்கிறேன். எனக்கு இப்பொழுது சினிமா பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. அதற்கு இதை பயன்படுத்தி கொள்கிறேன்." இதுதான் அதன் சாரம்சம். ஆனால் உண்மை அதுவா எனக்கேட்டால், சொல்கிறேன் படியுங்கள்.
இந்த இன்ஸ்ட்டா பக்கத்தை நான் எப்படி ஏன் ஆரம்பித்தேன் என்பதை ஒரு ப்ளாக் பதிவில் ஒரு துணுக்காகவும் பாட்காஸ்ட்டில் ஒரு காற்றுவாக்கு தகவலாகவும் சொல்லி இருந்தேன். அதற்குபின் இங்கே உருவான கூட்டம் என்னை பிரம்மிக்க வைத்தது. ஆனால் அவர்களுக்கு நான் என்ன செய்தேன்? தெரியாது. என்ன செய்ய நினைக்கிறேன்? குறைந்தபட்சம் அவர்களுடன் நேரம் செலவிட. ஆனால் பெரும் பிரச்சனை என்னெனில் இங்கே அனைவருக்கும் நான் யார் என்ற கேள்வி இருக்கிறது. அது மட்டுமே அவர்களுக்கும் எனக்குமான பெரும் பாலம் என்பதை நம்புகிறார்கள். ஆனால் அதுதானா எனக்கேட்டால் நான் அதை நம்பவில்லை.
என்னுடைய பெயர், ஊர், படிப்பு, வேலை/தொழில் இதில் எதுவும் உங்களுக்கு எந்த வகையிலும் உதவப்போவதில்லை என்பதில் நான் திடமாக உள்ளேன். உண்மையும் அதுதான்கூட. ஆகவே உங்களையும் என்னையும் இணைக்கும் பாலமாக நான் நினைப்பது ஓர் ஆரோக்கியமான உரையாடல்.
உரையாடல்.
என்னைப் பொறுத்தவரையில் உரையாடல் என்பது வெறுமனே மணிக்கணக்காக பேசிக்கொண்டிருப்பதில்லை. ஆரோக்கியமாக இருக்க வேண்டும். நீங்கள் என்னுடன் உரையாடுகையில் புதியதாக ஒரு விசயத்தை கற்று இருக்க வேண்டும். நான் உங்களுடன் உரையாடுகையில் உங்களிடம் புதியதாக அதாவது என்னிடம் பதில் இல்லாத ஒரு கேள்வி இருக்க வேண்டும். எனக்கும் உங்களுக்கும் அறிவிற்கு திண்பண்டம் கொடுக்க வேண்டும் அவ்வுரையாடல். நான் அதை பெரிதும் விரும்புவேன். இப்பொழுது அதற்கான களம் வேண்டும். அந்த களத்தை உருவாக்கும் முயற்சிதான் பாட்காஸ்ட்டும், சினிமாவிற்கு உருவாக்கப்பட்ட புது சேனலும். இரண்டுமே தோல்வியில் முடிந்தது.
பாட்காஸ்ட்.
இந்த பாட்காஸ்ட்டில் என்ன பிரச்சனை எனில், அதை நான் உருவாக்கியதற்கான முக்கிய காரணம் என்னுடைய பதிவுகள் புரியவில்லை என தொடர்ச்சியாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்தாம். நான் கடந்து வந்த பாதை என்னவென உங்களுக்கு தெரியாது. நான் பார்க்கும் கோணத்தில் உங்களால் வாழ்க்கையில பார்க்க இயலாது. ஆக, நானே என்னுடைய பதிவுகளுக்கு விளக்கம் கொடுக்கம் முயற்சிதான் பாட்காஸ்ட். ஆனால் கேள்வி கேட்ட யாவருக்கும் பாட்காஸ்ட் கேட்க நேரமில்லை. நிச்சயமாக உங்களை குறை சொல்ல மாட்டேன். இந்த உலகம் வெகு வேகமாக சென்று கொண்டிருக்கிறது. 30 நொடி ரீலில் அத்தனை மனித உணர்வுகளையும் விற்று கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்க, மணிக்கணக்கில் என்னுடைய பாட்காஸ்ட்டை கேளுங்கள் என நான் சொல்வதில் எவ்வித நியாயமும் இல்லை. போலவே ஒரு நொடியில் பதில் சொல்வதில் எனக்கு விருப்பமும் இல்லை. இதைவிட பெரிய பிரச்சனை புதிய ஃபாலோவர்கள். புதியவர்கள் வர வர அவர்கள் முன்னே என்ன நடந்தது என்பதை அறிய ஆர்வமாக இருக்கின்றனர். ஆனால் அதற்கு நேரம் செலவு செய்ய தயாராக இல்லை.
எடுத்துக்காட்டாக, என்னுடைய காதல் பதிவுகளை பார்த்த ஓர் பெண் எனக்கு மெசேஜ் செய்திருந்தார். அவருக்கும் எனக்குமான உரையாடல் இது
"நீங்கள் காதலித்து இருக்கிறீர்களா?"
"ஆம். மூன்று முறை."
"உங்கள் காதலைப்பற்றி சொல்லுங்கள்."
"என்னுடைய ப்ராட்காஸ்ட் சேனலில் அத்தனையும் பதிவிட்டு இருக்கிறேன். பாருங்கள்."
ஒரு அரைமணி நேரம் கழித்து.,
"அங்கே நிறைய மெசேஜ்கள் இருக்கின்றன. எப்பொழுது தேடி எடுப்பது? நீங்களே சொல்லுங்களேன். கால் செய்யவா?"
எனக்கு இப்பொழுது கால் செய்வதோ அல்லது என்னுடைய காதலைப்பற்றி சொல்வதிலோ எவ்வித சிரமமும் இல்லை. காதலையும் காதலியையும் பற்றி பேசுவதற்கு வலிக்கிறதா என்ன? ஆனால் பிரச்சனை என்னவெனில் நான் இதேபோல எத்தனை பேரிடம் சொல்ல முடியும்? எத்தனை பேருக்கு விளக்கம் கொடுக்க முடியும்? இன்றைய தேதியில் 67,000 பேர் இருக்கிறீர்கள். வெறும் ஒரு சதவிகிதம் வைத்தால்கூட 670 பேரிடம் பேசிய விசயத்தையே நான் பேச முடியுமா? சலிப்பாக இருக்காதா? சரி 670 பேரிடமும் சொல்லி முடித்துவிட்டேன் என்றே வைத்துக்கொள்வோம். அதன்பிறகு நான் காதல் கவிதைகள் எழுத மாட்டேனா? வேறு யாரும் கேட்க மாட்டார்களா? இந்த கேள்விகளுக்கெல்லாம் எனக்கு விடை கிடைத்ததே இல்லை. முக்கியமான ஒரு கேள்வி எனக்கு உருவானது. "உங்களுடைய நேரம் உங்களுக்கு அவ்வளவு பிரத்யேகமானது என்றால், என்னுடைய நேரம் தெருவில் கிடக்கிறதா?" இந்த கேள்வி வந்த பிறகுதான் நான் பாட்காஸ்ட்டை இழுத்து மூடினேன்.
எல்லாத்தையும்விட முக்கியமாக, நான் யாரிடமும் இதுவரை லைக் செய்யுங்கள், ஃபாலோ செய்யுங்கள், கமெண்ட் செய்யுங்கள என கேட்டதில்லை. பாட்காஸ்ட்டை கேளுங்கள் என எப்படி கேட்பேன்? இப்படி நான் கேட்டு அதாவது பிட்சை எடுத்துதான் இதை உருவாக்க வேண்டும் என்றால் 12 வருடங்களாக எழுதி, 13 வது வருடத்தில் என்னை நிலை நிறுத்தி இருக்க மாட்டேன். 12 வருடங்களுக்கு முன்பே அதாவது நான் எழுத ஆரம்பித்தபொழுதே எழுத்தாளனாக அறியப்பட்டிருப்பேன். ஆரம்பத்தில் காலில் விழுந்து எழுந்து நின்றபின் எட்டி உதைப்பது என்னமாதிரியான பழக்கம்? போலவே திறமை இருக்கும் ஒருவன் சுயமரியாதையை இழப்பதெப்படி?
சினிமா சேனல் - ஜனரஞ்சகம்.
புரியவைப்பதெல்லாம் ஆவதில்லை என்ற நிலைக்கு வந்தபின் சகஜமாகலாம் என்ற எண்ணத்தில்தான் நான் சினிமா சேனல் ஆரம்பித்தேன். ஏன் சகஜமாக வேண்டும்? ஏன் உரையாட வேண்டும் என்றெல்லாம் நீங்கள் கேட்கலாம்.
நான் Restrict செய்து வைத்திருக்கும் ஒருவன் அதாவது என்னை திட்டிக்கொண்டே இருக்கும் ஒருவன் என் குடும்பத்தை பற்றிய தவறான கமெண்ட்டிற்கு,"அவன திட்டு அவன் குடும்பத்த பத்தி பேசாத" என சண்டைக்கு நிற்க வேண்டிய தேவை என்ன? எத்தனையோ முகம் தெரியாத பலர், என்னிடம் ஒரு தடவைகூட பேசிடாத பலர் கமெண்ட்டில் எனக்கு ஆதரவாக நிற்பதற்கும், எனக்கு வரும் வசைபாட்டுக்கு எதிராக நிற்பதற்குமான காரணம் என்ன? தெரியுமா? தெரியாது. குறிப்பாக எனக்கே தெரியாது. ஆனால் நிற்கிறார்கள். அவர்களுடன் பேசுவதில் நான் என்ன அழிந்துவிடப்போகிறேன்?
பேச வேண்டும். ஆனால் அந்த உரையாடலில் நான் இருக்க வேண்டுமே ஒழிய உரையாடலாகவே நான் இருக்க கூடாது அதாவது உரையாடப்படும் தலைப்பாக நான் இருக்ககூடாது என்பதுதான் என் எண்ணம்.
என்னிடம் நீங்கள் சினிமா, அரசியல், பொருளாதாரம், பங்குச்சந்தை, சட்டம், கல்வி, தொழில், வேலை, கம்யூனிசம், அனிமே, வெப் சீரியஸ், புத்தகம், மருத்துவம் என எதைப்பற்றி பேசினாலும் அதைப்பற்றி பேச என்னால் முடியும். இரண்டு நாட்களுக்குமுன் "டெஸ்ட் ட்யூப் பேபி" யின் ப்ராஸஸ் என்ன என்பதை கற்றுக்கொண்டு இருந்தேன். அது எனக்கு தேவையில்லை. அதைவைத்து நானும் எதுவும் செய்யப்போவதில்லை. ஆனால் அறிந்துகொள்ள வேண்டும். எனக்கு அதைப்பற்றி தெரியாமல் இருக்க கூடாது. அவ்வளவுதான்.
இந்த அறிவுப்பகிர்வின் துவக்கமாகத்தான் இந்த சினிமா சேனல். ஏன் எனக்கேட்டால் ஏற்கனவே இருக்கும் சேனலில் அதாவது டஞ்ஜனில் இருக்கும் ஃபாலோவர்கள் பலவிதமாக இருப்பதை கவனித்தேன். சிலர் அனிமே சிலர் சினிமா சிலர் அரசியல் சிலர் புத்தகம் சிலர் தொழில். அவர்களுக்கு ஒவ்வொருத்தருக்கும் ஒரு பேசுதளத்தை உருவாக்க வேண்டும் என நினைத்தேன். உருவாக்கவும் செய்தேன். ஆனால் தோல்வி.
பிரச்சனை என்னவெனில் அனைவராலும் அனைத்திலும் கவனத்தையும் நேரத்தையும் செலுத்த முடியாது. தனக்கு தெரிந்த ஒரு விசயத்தில் தன் திறமையையும் ஆர்வத்திற்கு தீனி போடும் வேலையையும் செய்யலாம் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை. இந்த சினிமா சேனலுக்கு வரவேற்பு பெரியதாக இருக்காது என நினைத்தேன். அதுவே நடந்தது. ஆனால் நான் எதிர்பாராத ஒன்று,"நான் சினிமா பார்க்க மாட்டேன். அதற்கான நேரமில்லை. பார்க்க விரும்புகிறேன்." எனவும் "இந்த படத்தை பார்க்கலாமா வேண்டாமா? அதை மட்டும் சொல்" எனவும் மெசேஜ்களும் கமெண்ட்களும். நான் அங்கே நினைத்தது அந்த குறிப்பிட்ட சினிமாவை, சினிமா ரசிகர்கள் பார்க்க வேண்டும் அல்லது பார்த்தவர்கள் அதுகுறித்த உரையாடலுக்கு வர வேண்டும் என்பதுதான். நடக்கவில்லை. போலவே,"அனிமேக்கு க்ரூப் போடு தல. புக் க்கு க்ரூப் போடுங்க நண்பரே. முன்னாடி ட்ராவல் போவீங்கள்ல? அதுபத்தி பேச ஒரு க்ரூப் போடுங்க." வகையறா மெசேஜ்கள்.
ஒரே நேரத்தில் அத்தனை சேனல்கள் உருவாக்க இயலாது. போலவே அத்தனையையும் அத்தனை பேரிடமும் கொண்டுபோய் சேர்க்க முடியாது. அப்படி நான் சேர்க்க நினைத்தால் அதற்கு இருக்கும் ஒரே வழி டஞ்ஜன் மட்டும்தான். ஆனால் எல்லா நேரமும் ஆன்லைனில் இல்லாதவர்களால் டஞ்ஜனில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியாது. தெரிந்துகொள்ள முடியாதவர்களைப்பற்றி என்ன கவலை எனக்கேட்டால் அவர்களும் என் ஃபாலோவர்கள்தானே என்பதுதான் கவலை. தெரிந்துகொள்ள எந்நேரமும் ஆன்லைனில் இருங்கள் என சொல்வது எந்த விதத்திலும் நியாயமாகவும் இருக்காது. என்னால் எந்நேரமும் எதையாவது பேசிக்கொண்டும், கற்றுகொண்டும், சினிமா அனிமே வெப் சீரியஸ் பார்த்துக் கொண்டும் இருந்துவிட முடியும். எல்லோரையும் அப்படி இருக்க சொல்ல முடியுமா? அல்லது அவர்களுக்கு வேலை இருக்காதா? அல்லது அப்படி அறிவை வளர்த்துக்கொள்வது மட்டுமே வாழ்க்கை என வாழ்க்கை எல்லோரும் தேர்ந்தெடுக்க இயலுமா? அப்படி தேர்ந்தெடுக்க நேர்ந்தால் கிட்டத்தட்ட சந்யாசம் செல்வதைப்போல. இது சாத்தியமாகுமா என்ன? வாய்ப்பே இல்லை.
இதையெல்லாம் சிந்தித்து பார்த்தேன். எனக்கு அடுத்ததாக ஒரு வழி இருக்கிறது அதுதான் டிஸ்கார்ட் (Discord). அங்கே ஒரு சர்வரை உருவாக்கி அதில் ஒவ்வொரு தலைப்பிற்கும் ஒவ்வொரு டேப் போட்டு நொறுக்கி எடுத்துவிடலாம். ஏற்கனவே ஆரம்பித்த டிஸ்கார்ட் சர்வர் சும்மாதான் இருக்கிறது. தூசி தட்டிவிடலாம் என நினைத்தேன். அதிலும் ஓர் பிரச்சனை.
டிஸ்கார்ட்டை பொறுத்தவரையில் அது அனைவரும் உரையாடும் பொது தளமாக இருக்கும். தங்களுக்கு பொறுத்தமான அறையில் அவரவர் போய் உட்கார்ந்துகொண்டு உரையாடி தள்ளலாம். அவ்வப்போது நானும் உள்ளே வந்து உருண்டுகொள்ளலாம் என நினைத்தேன். ஆனால் என்னுடைய ஃபாலோவர்களில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் பெண்கள். அவர்களுக்கு ஹராஸ்மென்ட் நடக்காது என என்ன நிச்சயம்? அவர்கள் இது இக்ரிஸின் சர்வர் என நம்பி இறங்குவார்கள். ஆண் புத்தி என்ன செய்யும் என எனக்கே தெரியும். அப்படி இருக்கும்பொழுது அங்கே பாதுகாப்பை என்னால் எப்படி உறுதி செய்ய முடியும்?
"ஆன்லைனில் இருக்கும் பெண்கள் அவர்களின் பாதுகாப்பை அவர்களே பார்த்துக் கொள்வார்கள். நீ என்ன பாதுகாக்க போற? இல்ல உன்னத்தவிர வேற யாரும் யாருகிட்டயும் பேசிட கூடாதுன்னு நினைக்கறியா?" என்றெல்லாம் உங்களுக்கு கேள்வி எழலாம். கமெண்ட் செக்சனில் நடக்கும் சில கூத்துக்களை பார்க்கும்பொழுது நான் உணர்ந்த ஒரு விசயம் பெண்கள் எவ்வளவுதான் சகஜமாக இருக்க நினைத்தாலும் கடைசியில் ஆண்,"தனியா வா பேசலாம்" என்ற இடத்திற்குதான் வருகிறான். அதுவே டிஸ்கார்ட்டிலும் நிச்சயமாக நடக்கும். நான் யாரையும் பாதுகாக்கப் போவதில்லை. ஆனால் நான் வேறொரு காரணத்திற்காக உருவாக்கிய ஒன்றை இவர்கள் ஆன்லைன் டேட்டிங் சைட்டாக பயன்படுத்துவதை என்னால் அனுமதிக்க முடியாது. நான் செய்ய நினைப்பது அறிவுப்பகிர்வு மட்டுமே. மேலே சொல்ல வேண்டுமா?
இது எல்லாத்தையும்விட பூதாகாரமான பிரச்சனை என்னவெனில் இவ்வளவு நேரம் டிஸ்கார்ட் என நீங்கள் படித்த ஒன்று என்ன? அது எப்படி இருக்கும்? எப்படி வேலை செய்யும்? அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது இதை படித்துக் கொண்டிருக்கும் உங்களில் பலருக்கே தெரியாது. யூட்யூபில் ஊருப்பட்ட வீடியோக்கள் இருக்கும் அதைப்பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் என சொன்னால்,"அந்த வீடியோவ தேடி எடுத்து குடு" என என்னிடமே சொல்வீர்கள். நான் இங்கே இந்த பக்கத்தை செயல்படுத்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்களை வைத்து லட்சங்களில் முதலீடு செய்து கோடிகளில் சம்பாதிப்பதாகவும், அந்த நூறில் ஒருத்தர் உங்களுக்கு ரிப்ளை செய்யாமல் விடுவதாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இங்கே நான் ஒருவனாக மாரடித்துக் கொண்டிருக்கும் சோகத்தை யாரிடம் சொல்வேன்?
இத்தனையும் படிக்கும்பொழுதே உங்களுக்கு,"யப்பா ஆள வுட்றா" என தோன்றி இருக்கும். இத்தனையையும் சிந்தனைக்குள் வைத்து நான் என்ன செய்ய முடியும்? இது வெறும் இன்ஸ்ட்டாகிராமைப் பற்றியது மட்டும்தான். இதற்குப்பின் அதாவது இந்த திரைக்குப்பின் எனக்கு வாழ்க்கை என ஒன்று இருக்கிறதல்லவா? அது எத்தனை கிலோமீட்டருக்கு அந்த பக்கம் கிடக்கிறது என்றே தெரியவில்லை.
அதனால் நான் என்ன முடிவு செய்திருக்கிறேன் எனில், இனி புது முயற்சிகள் எதுவும் வேண்டாம். ஆரம்பத்தில் நான் எப்படி பதிவுகள் இட்டுவிட்டு கமெண்ட்களுக்கு சேனலில் ரிப்ளை செய்துகொண்டு இருந்தேனே அப்படியே இருந்துவிட நினைக்கிறேன். ஏன் இப்படி என நீங்கள் நினைக்கலாம். என்னைப் பொறுத்தவரை ஒன்றுதான்.
ஒன்று அனைவருக்கும் நல்லவனாக இருக்க வேண்டும். அல்லது அனைவருக்கும் கெட்டவனாக இருந்துவிட வேண்டும். சிலருக்கு நல்லவனாக சிலருக்கு கெட்டவனாக பச்சோந்தி வாழ்க்கை வாழ என்னால் முடியாது.
- எழுத்தாளுமை இக்ரிஸ் (27/10/2025)
கருத்துகள்
கருத்துரையிடுக