சமீபத்தில் நான் புத்தகங்கள் வெளியிட்டு இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். என்னுடைய பதிவுகளை புத்தகமாக வெளியிடலாம் என பல மாதங்களுக்கு முன்பு ஒரு பப்ளிஷர் சொல்லி இருந்தார்.
அவர் கூறியதாவது,"ஏற்கனவே பதிவிட்ட பதிவுகளில் அறுபது எழுவது பதிகளை எடுத்துக்கொள்ளலாம். புதியதாக முப்பது நாற்பது பதிவுகளை எழுதி கொடுங்கள். மொத்தமாக புத்தகமாக வெளியிடலாம்".
நான் 2020 காலகட்டத்தில் சினிமாவில் உதவி இயக்குனராக மற்றும் இயக்குனராக முயன்று தோற்று போன பின் (ஆம். நான் சினிமாவில் உதவி இயக்குனராக பணிபுரிய முயன்று இருக்கிறேன். பின் நடிகனாகவும் பணிபுரிய முயன்று இருக்கிறேன். அது குறித்த கதைகள் பின்னாளில் வெளிவரும் அல்லது ஒரு புத்தகமாக வெளியிடுவேன்) என்னுடைய கதைகளை பல தயாரிப்பு நிறுவனங்களிலும் இயக்குனர் கொட்டகைகளிலும் சொல்லி இருக்கிறேன். அப்பொழுது என்னுடைய கதைகள் வெளியாகிவிட்டால் என்ன செய்வது என்ற பயம் என்னுள் உறுத்தியது. சரி என்னுடைய கதைகளை என்னுடைய பெயரில் காப்புரிமை பெற்று வைத்துக்கொள்வோம் என நினைத்தேன்.
காப்புரிமை (Copyright)
புத்தகங்களுக்கு காப்புரிமை/பதிப்புரிமை பெறுவது பெரிய விசயம் இல்லை என்பதுதான் உண்மை. தேவைப்படுவதெல்லாம் எழுதிய புத்தகத்தை 2 பதிப்புகள் செய்து அதற்குண்டான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து டெல்லிக்கு 500 ரூபாய் பணம் செலுத்தி அனுப்பி வைத்தால் காப்புரிமை பெற்றுவிடலாம். ஆனால் இடைத்தரகர்கள் மற்றும் புத்தகத்தை அச்சிடுவது மற்றும் காப்புரிமை பெறுவதற்கு காத்திருக்கும் காலம் மற்றும் அனைத்து அரசாங்க அலுவலகத்திலும் வரும் அதே பிரச்சனைகள் இதற்கும் வரும். எனவே குறுக்கு வழி தேவைப்பட்டது. என்னுடைய கதைகளை அச்சு நகலாக எழுதி அதை ஏதாவது ஒரு பதிப்பகத்தில் கொடுத்து அவர்களை புத்தகமாக வெளியிட வைத்துவிடலாம் என்பதுதான் அது.
இந்த வகையில் சிந்தித்தால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் என நினைத்தேன். அதாவது முதலில் புத்தகமாக வெளியிட்டு விடுவேன். எழுத்தாளனாக என்னை பதிவு செய்துவிடுவேன். இரண்டாவது என் பெயரிலோ அல்லது அந்த பதிப்பகத்தின் பெயரிலோ காப்புரிமை பெற்றுவிட்டால் அந்த கதைகள் பாதுகாக்கப்பட்டுவிடும். எப்படி பார்த்தாலும் ஒன்று எனக்கு என்னுடைய கதைகளை நானே இயக்கும் வாய்ப்பு கிடைக்கும் அல்லது என்னுடைய கதைகளை சினிமாவாக எடுக்க யாராவது முயன்றால் அதற்கு நான் அனுமதி தர வேண்டும். அவர்களிடம் நான் உதவி இயக்குனராக பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனை வைத்துவிடலாம். இதில் எதுவுமே நடைக்கவில்லை எனில் கடைசி அஸ்திரமாக எழுதுவதே பிழைப்பாக வைத்துக்கொள்ளலாம் என்னும் மாஸ்டர் பிளான் செய்தேன். அதில் மண் விழுந்தது.
பதிப்பகமும் நானும்
என்னுடைய மாஸ்டர் ப்ளானையும், நான் ஏழெட்டு மாதங்களாக எழுதிய அதாவது அதுவரை சாஃப்ட் காப்பியாக இருந்த கதைகளை ஹார்ட் காப்பியாக எழுதி அவைகளை கையில் எடுத்துக்கொண்டு பல பதிப்பகங்களுக்கு பல்பு வாங்கப் போகிறேன் என்ற எவ்வித அபாய ஒலியும் காதில் விழாமல் சென்றேன். எல்லா பதிப்பகங்களிலும் எனக்கு பொதுவாக சொல்லப்பட்ட பதில் இதுதான்.
"நீங்க இப்போதான் புதுசா எழுதுறீங்க. உங்களுக்கு வாசகர்கள் இருப்பாங்களான்னு தெரியாது. அப்டின்னா உங்கள புதுசா இந்த மக்களுக்கு அறிமுகப் படுத்தனும். அதேபோல உங்க புத்தகங்கள் ஜனரஞ்சகமா இருக்கான்னு தெரியாது. அது எந்த மாதிரியான வாசகர்களுக்கு போய் சேரும்னு தெரியாது. போலவே வாசகர்கள் ஒரு புத்தகத்தை படிச்சுட்டு மீண்டும் உங்களோட அடுத்த புத்தகங்களுக்கு காத்திருப்பாங்களான்னும் தெரியாது. எந்த நம்பிக்கைல எங்கள இத ப்ரிண்ட் பண்ணி விக்க சொல்றீங்க?"
இந்த கேள்விகள் நியாயமாக இருந்தது. அவர்களின் பக்கம் இருந்து யோசித்தால் புத்தகத்தை அரேஞ்ச் செய்வதற்கும், அதை டிஜிட்டலாக்குவதற்கும், முதல் பக்க டிசைன் செய்வதற்கும், போலவே அவர்களின் பதிப்பகத்திற்கு தொன்றுதொட்டு எழுதும் எழுத்தாளர்களை படிக்க வைத்து முன்னுரை எழுத வைப்பதற்கும், புத்தக அறிமுக விழா நடத்துவதற்கும், புத்தக திருவிழாவில் புத்தகங்களை வைத்து வியாபாரம் செய்வதற்கும், அந்த புத்தகங்களுக்கு காப்புரிமை பெறுவதற்கும் எல்லாவற்றிற்கும் மேலாக புத்தகங்களை அச்சிடுதற்கும் என அத்தனைக்கும் பணம் வேண்டும். யாரோ ஒரு ஊர் பேர் தெரியாத ஒருவன் நான் புத்தகம் எழுதி இருக்கிறேன் அச்சிடுங்கள் எனச் சொன்னால் அவர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?
"நான் அப்பப்போ ட்விட்டர்ல போஸ்ட் போடுவேன். என்னோட போஸ்ட் விகடன், குங்குமம், குமுதம் இன்னும் சில பத்திரிக்கைகள் அப்பறம் ஸ்ரீலங்கால சில வார இதழ்கள்ல வெளி வந்து இருக்கு. என்னோட ட்விட்டர் பக்கத்தில போட்டு ப்ரமோட் பண்ணலாம்ல?" என்றேன்.
"நீங்க சொல்றது நியாயம். ஆனா ஆன்லைன்ல இலவசமா பாத்து லைக் பண்ணிட்டு போறதுக்கும் புத்தகத்த காசு குடுத்து வாங்குறதுக்கும் வித்தியாசம் இருக்கு. நீங்க உங்க புத்தகத்த பிடிஎஃப்பா கொடுத்தாலே படிக்க இங்க யாரும் தயாரா இல்ல. போலவே, வலைப்பதிவா எழுதி பதிவிட்டு பாருங்க. படிக்க யாரும் இருக்க மாட்டாங்க. அப்டிங்கறப்ப எந்த நம்பிக்கைல வெறும் போஸ்ட்ஸ வச்சு அது ஆகற ரீச்ச வச்சு புக் ரிலீஸ் பண்ண முடியும்?" என கேட்டனர்.
"வேற என்னதான் வழி இருக்கு?" என கேட்டேன்.
"ஒரு லட்ச ரூபா பணம் கொடுங்க. 100 புக் ப்ரிண்ட் பண்ணுவோம். பஸ் ஸ்டேண்ட்ல இருக்க ஸ்டால்ஸ்ல, புத்தக திருவிழால அப்டின்னு வைப்போம். கூடவே அமேசான் கிண்டில்லயும் போடுவோம். காப்பிரைட் பண்ணிக்கலாம். அதுக்கப்பறம் சேல்ஸ் பாத்துட்டு முடிவு பண்ணிக்கலாம். நல்லா போச்சுன்னா அடுத்த 100 புக் ப்ரிண்ட் பண்ணலாம். அது எங்க செலவுல நாங்க பண்ணிக்கறோம். போலவே முதல் நூறு புக்குக்கு ராயல்டி எதுவும் வராது. அதுக்கப்பறம் பிரிண்ட் ஆகற புக்குக்குதான் ராயல்டி வரும்" என ஒரு பிட்சை சதவிகிதத்தை சொன்னனர்.
இதெல்லாம் சரிதான். ஆனால் அதுவரை நான் எழுதியதை ஒருவர்கூட வாங்கி படித்து பார்க்கவில்லை. என்ன எழுதி இருக்கிறேன் என யாருக்கும் தெரியவில்லை. அவர்களுக்கு அதைப்பற்றிய கவலையும் இல்லை. நாளின் இறுதியில் அத்தனையும் பணம்தான்.
அமேசான் கிண்டில்
அவர்கள் சொல்லியதில் என் மனம் உடன்பட்டாலும், இங்கே திறமைக்கு என்ன மரியாதை என்ற கேள்வி வந்தது. நீங்கள் நினைக்கலாம் உன்னிடம் என்ன திறமை இருக்கிறது? நீ என்ன எழுதி கிழித்துவிட்டாய்? சும்மா கான்ட்ரவர்சியா போஸ்ட் போட்டு லைக்ஸ் வாங்கிட்டா உனக்கு திறமை இருக்குன்னு நீயே நம்பிக்கிறியா? என்றெல்லாம்.
உண்மையில் அதுவும் திறமைதான். எங்கே எந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்? எதை எப்படி சொல்ல வேண்டும்? நான் எழுதுவது உங்களுக்கு எப்படி போய் சேரும்? நீங்கள் எப்படி அதற்கு லைக் செய்கிறீர்கள்? என்றெல்லாம் ஒற்றை ஆளாக இதை செய்தல் திறமைதான்.
என்னைப்போல ஆயிரம் பேர் எழுத முயன்றாலும் நான் தனித்துவமாக நிற்பது திறமைதான்.
லைக்/கமெண்ட்/ஃபாலோ செய்யுங்கள் என கெஞ்சாமல் எனக்கென கனிசமான கூட்டத்தை உருவாக்கி வைத்திருத்தல் திறமைதான்.
ஒரே ப்ளாக் பதிவில் கூகிளின் A.I Summary-ஐ மாற்றுவது திறமைதான்.
இதெல்லாம் இப்பொழுது. என்னுடைய புத்தக வெளியீட்டு பயணம் நிகழ்ந்தது 2019-2020களில். அப்பொழுது என்னுடைய இரத்தம் இன்னும் சூடாக இருந்தது. அப்பொழுது நான் எழுதியவைகளை இப்பொழுது படித்தால் எனக்கே வியப்பாக இருக்கிறது. அதெல்லாம் நான் இன்று எழுதுவதை விட பல்லாயிரம் மடங்கு கிரியேட்டிவாக இருக்கிறது. இருக்கட்டும்.
எனவே நான் அவைகளை அமேசான் கிண்டிலில் வெளியிட முடிவு செய்தேன். அமேசானும் அப்புத்தகங்களை காப்பிரைட் செய்துவிடுவான். ISBN போலவே ASIN (நடிகை அசின் இல்லை. Amazon Standard Identification Number) என ஒன்று வைத்திருக்கிறான். எனவே அவனிடம் புத்தகத்தை கொடுத்துவிடுதல் சுலபமாக இருக்கும் என முதல் புத்தகத்தை அவனிடம் வெளியிட்டு காப்புரிமை பெற்றுவிட்டேன். அதற்குப்பின் 12 புத்தகங்களை எழுதி அவற்றையும் அவனிடமே வெளியிட்டு பத்திரப்படுத்திவிட்டேன். இந்த தகவலை நான் என்னுடைய கதைகளை சொன்ன தயாரிப்பு நிறுவனங்களும், உதவி இயக்குனர்களும், இயக்குனர்களும் பகிர்ந்தும் விட்டேன். இன்றுவரை அவைகள் பத்திரமாக அமேசான் கிண்டிலில் உறங்கிக் கொண்டிருக்கின்றன.
புது பரிணாமம்
இப்படி இருக்க, எதுவுமே இல்லாமல் என்னுடைய பதிவுகளை புத்தகமாக வெளியிடுகிறேன் என ஒரு பதிப்பகம் என்னிடம் சொல்கிறது. எப்படி நம்புவேன்? எனவே நான் அவர்களிடம் சில கேள்விகள் கேட்டேன்.
"நான் எவ்ளோ இன்வெஸ்ட் பண்ணனும்? அப்டி இன்வெஸ்ட் பண்ண தேவையில்லைன்னா நீங்க கான்ட்ராக்ட் போடுவீங்களா? அந்த கான்ட்ராக்ட் எத்தன வருசத்துக்கு இருக்கும்? நான் உங்களுக்கு எத்தன புக் எழுதி தரனும்? உங்க கான்ட்ராக்ட் இருக்கப்ப நான் வேற பதிப்பகத்துக்கு எதுவும் எழுதி தர முடியாது. சோ, நான் ஹைக்கூ மாதிரி இல்லாம கதைகளா கட்டுரைகளா எழுதி கொடுத்தா அதை வெளியிடுவீங்களா? எனக்கு எவ்ளோ ராயல்டி? நீங்க உங்க கைக்காசுல எனக்கு புக் ரிலீஸ் பண்றதுக்கான ரீசன் என்ன?" இன்னும் சில..
இந்த கேள்விகள் கேட்கும்பொழுதே எனக்கு தெரியும் இந்த பதிப்பகம் ஓடிவிடும் என. ஆனாலும் கேட்டேன். அதற்குப்பின் அவர்கள் என்னை மூன்று மாதங்கள் காத்திருக்க சொன்னனர். அதற்குப்பின் மீண்டும் மூன்று மாதம். கடைசியாக பேசும்பொழுது மூன்று மாதத்தை விட்டு இரண்டு மாதம் காத்திருங்கள் என்றனர். இதற்கிடையில் நான் மூன்று பேரை காதலித்து காதல் தோல்வியே ஆகிவிட்டேன். ஆனால் அவர்கள் பதில் சொன்ன பாடில்லை.
அவர்கள் மீண்டும் வர மாட்டார்கள் என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு மீண்டும் அமேசானை தூசி தட்டினேன். புதியதாக ஒரு கணக்கு துவங்கினேன். பதிவுகளை ஒழுங்குபடுத்தினேன். அமேசானில் அப்லோட் செய்தேன். வெளியாகிவிட்டது.
இப்பொழுதும் நான் புத்தகமாக வெளியிட நினைத்ததற்கு ஒரே காரணம்தான். என்னுடைய பதிவுகளுக்கு காப்புரிமை வேண்டும். அதை யாரோ பகிர்ந்து லைக் கமெண்ட் வாங்குபவர்களை தடுக்க இயலாது. ஆனால் கடைசியில் அவற்றின் அப்பா நான் என்பதற்கு ஆதாரம் என்னிடம் வேண்டும் அவ்வளவுதான். அதற்கான வேலைதான் இந்த புத்தக வெளியீடு. போலவே எழுத்தாளனாக இருந்து போரடித்துவிட்டது. நூலாசிரியனாக வலம் வருவோம். எழுத்தாளன் வேறு நூலாசிரியன் வேறு என்பதை மனதில் பதித்துக் கொள்ளுங்கள்.
எல்லாவற்றையும்விட முக்கியமாக இனி நான் பகிரும் பதிவுகள் ஏற்கனவே என்னுடைய புத்தகத்தில் வெளிவந்தவைகளாக இருக்கும். த்ரிஸ்யம்-2 பார்த்ததை போல இருக்கிறதா? அப்படித்தான் இருக்கும். இதுதான் ஒரு எழுத்தாளன் எந்த அளவிற்கு யோசிக்க முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டு. ஆனால் இதைவிட பயங்கரமாகவும் யோசிக்க முடியும். சினிமாக்களில் கமர்சியல் தேவைப்படுவதைப்போல இன்ஸ்ட்டாகிராமிலும் தேவைப்படுவதால் என்னால் பல பதிவுகளை பதிவிட முடிவதில்லை. இது எனக்குள் நெருடலாகவே இருந்தது. இப்பொழுது அவைகளை புத்தகங்களில் வெளியிடலாம் எனும்பொழுது ஆத்மா அமைதியாக சாந்தியடையும்.
- எழுத்தாளுமை இக்ரிஸ் (16/11/2025)
Such an inspiring journey. Congratulations man
பதிலளிநீக்குThank you 🖤
நீக்குA good initiative… all the very best👍🏻and ur writings thou♥️✨
பதிலளிநீக்கு🖤
பதிலளிநீக்கு