முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நான் சந்தித்த மனிதர்கள் - 1

சில மாதங்களுக்கு முன், ஒரு தேநீர் விடுதியில் காபி குடிக்கலாம் என சென்றேன். நானோர் ஆகப்பெரும் காபி விரும்பி. இன்னும் சரியாக சொல்லப்போனால் காபி வாங்கி தருகிறேன் என சொல்லி என்னை கடத்தி கொண்டு சென்றுவிடலாம்.

எப்பொழுதும் நெரிசலாக இருக்கும் அந்த தேநீர் விடுதி, அன்று என்னமோ காற்றாடிக் கிடந்தது. எல்லா நேரமும் கூட்டம் இருக்க வேண்டும் என்ற எவ்வித கட்டாயமும் இருக்க தேவையில்லை எனினும் திடீரென கூட்டம் இல்லாமல் இருப்பது சற்றே நெருடலாக இருந்ததை நான் மறுக்க விரும்பவில்லை.

காபி போட சொல்லிவிட்டு சிகரெட் வாங்கி பற்ற வைத்தேன். எனக்கு சில வித்தியாசமான பழக்கங்கள் உள்ளது. சிகரெட் இல்லாமல் காபி இறங்காது, காபி இல்லாமல் சிகரெட்டை தொடமாட்டேன். என்னை பின் தொடர வேண்டாம். அது பெரும் பாதிப்பு. ஏனெனில் சிகரெட் புகைக்கும்பொழுது நம் தொண்டைக்குள் இருக்கும் நுண்ணிய நரம்புகளும், எதிர்ப்பு சக்தியை தரும் உயிரிகளும் இந்த புகையின் தாக்கத்தால் சுருங்கி ஒடுங்கி போய் இருக்கும். புகை பிடித்து முடித்த பின் குளிர்ந்த நீர் ஒரு குவளை குடித்து, அதற்கு பின் நான்கைந்து நிமிடங்கள் கழித்துதான் சூடான காபியை குடிக்க வேண்டும். இது உடல் அறிவியல். மருத்துவர்களும் இதைத்தான் பரிந்துரைப்பனர். ஆனால் நான் அதை கண்டுகொள்ள மாட்டேன். என் உடல் எவ்வளவு தாங்கும் என்பதை அறிந்துகொள்ளும் பேரவா என்னுடையது.

இரண்டாவது பழக்கம் பற்ற வைத்தவுடன் இழுத்த முதல் புகையை, பலர் உள்ளே இழுக்க மாட்டார்கள். நான் இழுப்பேன்.

அப்படி இழுத்து, திரும்பி ஊத முற்படும்பொழுது அந்த தேநீர் விடுதிக்கு எதிரே உட்கார்ந்து இருந்த பெரியவர் ஒருவர் என்னை அழைத்தார். அவர் அழைக்கும்வரை, அங்கே அவர் உட்கார்ந்து இருந்ததை நான் கவனிக்கவில்லை. சென்றேன்.

(பேச்சுவழக்கில்.)

"என்ன வேணும் பெர்சு?" நான்.

"டீ வாங்கிட்டு வா" அவர்.

"எதே? வாங்கிட்டு வரணுமா? காசு தர்ரேன். போய் வாங்கிக்க. வேற எதுனா வேணும்னாலும் வாங்கிக்க." நான்.

"அதெல்லாம் ஒன்னும் வேணா. டீ மட்டும் வாங்கினு வா" அவர்.

மறுக்க மனமில்லாமல், இதனால் என் கிரீடம் கீழே விழுந்துவிடப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்தபின், அவருக்கு தேநீர் ஒன்று சொன்னேன். அதற்குள் சிறிது கூட்டம் சேர்ந்துவிட்டது. தேநீர் கடைக்காரர் காத்திருக்க சொன்னார். அதற்குள் எனக்கு காபி தயாராகி இருந்தது. குடித்துவிட்டு சிகரெட்டையும் புகைத்து முடித்து சிகரெட்டை விரல்களில் பிடித்தபடி நெருப்பு கங்கை மட்டும் தரையில் தேய்த்து நெருப்பை அணைத்துவிட்டு தேநீரை வாங்கிக்கொண்டு அந்த பெரியவரின் அருகே சென்றேன்.

அதை கவனித்துக் கொண்டிருந்த பெரியவர், "ஏன் சிகரெட்ட கால்ல போட்டு மிதிக்க மாட்டியா?" என்றார்.

"பஞ்ச பூதங்கள்ல பெரிய சக்தி இந்த நெருப்பு. அத அவமரியாத பண்றமாரி இருக்கும்னுதான் நான் கால்ல போட்டு மிதிக்க மாட்டேன்" என்றேன்.

"கடவுள் பக்தியா" அவர்.

"நெருப்ப கடவுளா நினைக்கல. ஆனா அது நம்மள மீறுன ஒரு சக்தி. நமக்கு உதவியா இருக்க ஒரு சக்தி. அத மதிக்கலைன்னாலும் அவமரியாத பண்ணகூடாது" நான்.

"ஆனா அது நெருப்ப இல்லைல்ல? வெறும் கங்குதானே?" அவர்.

"நெருப்போட கங்குதானே? வெறுமனே கங்குன்னு ஒன்னு உருவாகிடாதுல்ல?" நான்.

"ம்ம் நீ சொல்றதும் சரியாட்டந்தான் இருக்கு. இனி நானும் கால்ல மிதிக்க மாட்டேன்" என்றார்.

"ஓ! நீ சிகரெட்லாம் அடிக்கறியா? டீக்கே வழியில்லாம பிச்ச எடுத்துட்டு இருக்கமாரி இருக்கு" நான்.

"ஏன்? பிச்ச எடுத்தா சிகரெட் அடிக்க கூடாதுன்னு இருக்கா? நானும் அடிப்பேன். ஃப்ளேக்கு. அஞ்சு ரூவாதான். நீ அடிச்ச சிகரெட்ட வுட நல்லாருக்கும்" அவர்.

"வாங்கித்தரவா?" எனக் கேட்டேன்.

"அதெல்லாம் இருக்கு" என்றபடி சட்டைப்பையில் தேடி துலாவி, பாதி சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தார்.

அதை பார்த்துக்கொண்டிருந்த நான்,"சரி நீ டி குடி. சிகரெட் வேணும்னா சொல்லு, வாங்கித் தரேன். இருந்த அர சிகரெட்டயும் பத்த வச்சுட்ட.. அப்பறமா அடிக்க என்ன பண்ணுவ?" என்றேன்.

"அத அப்போதைக்கு பாத்துக்கலாம். இப்ப அடிக்க சிகரெட்டும், குடிக்க டீயும் இருக்கு அது போதும்" என்றார்.

"சரி பெர்சு நா கெளம்பறேன். டீக்கு காசு குடுத்துட்டேன். வரட்டுமா?" என்றேன்.

"இரு! இரு! எங்க போற? உங்கிட்ட கொஞ்சம் பேசனும்" என்றார்.

எனக்கு இருக்கும் ஒரு சூப்பர் பவர் என சொல்லலாம் இதை. என்னை பார்த்த மாத்திரத்தில் என்னிடம் பலர் அவர்களின் வாழ்க்கையில் நடந்த சோகங்களை என்னிடம் சொல்லி ஆற்றிவிடுவர். நானும் சலிக்காமல் கேட்பேன். மனிதர்களிடம் உரையாடுதலை விடவா ஆகப்பெரும் அனுபவத்தை இந்த வாழ்க்கை தந்துவிடும்?

"சரி சொல்லு பெர்சு" என்றேன்.

அது ஒரு பெரும் கதை. சுருக்கமாக சொல்கிறேன். உங்களுக்கு படிக்க சுலபமாக இருக்கும்.

அவர் ஒரு ஓட்டுநர். ஒரு முக்கியான அரசியல் புள்ளிக்கு தனிப்பட்ட ஓட்டுநராக இருந்திருக்கிறார். அந்த அரசியல்வாதி தற்பொழுது உயிருடன் இல்லை. அந்த அரசியல்வாதிக்காக இவர் போகாத ஊரில்லை, சுற்றாத நாடில்லை. அவ்வளவு அலைந்து திரிந்து ஓடி ஒடி சம்பாதித்து ஒரு திருமணம் செய்து கொண்டார். இரண்டு மகன்கள். ஒருவனை அரசு ஓட்டுநராக்கி விட்டார். இன்னொருவனை அரசு பள்ளி ஆசிரியராக்கிவிட்டார். இரண்டு வீடுகள் கட்டி இருந்திருக்கிறார். மூன்றாவதாக ஒரு வீடு கட்டிக்கொண்டிருந்த பொழுது அந்த அரசியல்வாதி இறந்துபோக, அந்த வீட்டின் வேலை பாதியில் தடைபட்டது. அதுவரை சேர்த்து வைத்திருந்த பணம் நகைகள் அனைத்தையும் வைத்து, வீட்டை கட்டி, படாத பாடு பட்டிருக்கிறார். கடைசியில் அவரது மனைவி மக்களே அவரிடமிருந்து அனைத்தையும் வாங்கிக்கொண்டு அவரை வீட்டைவிட்டு விரட்டி விட்டனராம். வாட்ச்மேன் வேலைக்குகூட போக முடியவில்லை, வயதாகிவிட்டது என புலம்பினார்.

அத்தனையையும் தாண்டி எல்லாம் என் குடும்பத்துக்கும் என் பசங்களுக்குதானே என்று சொன்ன பொழுது அவ்வளவு பெருமிதம் அவரது முகத்தில். ஆனால், கடைசியாக பேரக்குழந்தைகளை பார்க்க கூட அனுமதிக்க மாட்டேன் என்கிறார்கள் என்று சொல்லும்பொழுது அழுதே விட்டார். உறைந்துபோய் அத்தனையும் கேட்டுக்கொண்டிருந்தேன். இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று.

அதிகபட்சம் ஒருவேளை உணவு, படுத்துக்கொள்ள திண்ணையில் ஒரு இடம் கொடுத்தால் என்ன குறைந்துபோய் விடுவார்கள் என்ற ஆத்திரம் வந்தது. இதை சிந்திக்கும்பொழுது இதேபோல எத்தனை எத்தனை முதியவர்கள் சாலையோரங்களில், முதியோர் இல்லங்களில், ஆலய வாசல்களில் இருக்கிறார்கள். அவர்களின் குடும்பமும் இப்படித்தான் செய்திருக்கும் என்ற ஆதங்கம்.

குழந்தையாக இருக்கும்பொழுது அப்படி பார்த்து கொண்டிருந்த உங்கள் பெற்றோர்களை, இப்படி தெருவில் விட எப்படி மனது வந்திருக்கும்? கல் நெஞ்சம் என்றுகூட சொல்லிவிட முடியாது கல்லில்கூட ஈரம் இருக்கும். இவர்கள் அதைவிட குரூரமானவர்கள்.

வெறும் பணமும், சொத்தும்தான் முக்கியமாக போய்விட்டதா? அப்படி வேண்டும் எனினும் பெற்றோர்களை தெருவில் விட என்ன தேவை இருக்கிறது? அவர்கள் அப்படி நினைத்திருந்தால் நீங்கள் இப்படி வளர்ந்து வந்து அவர்களின் காலை வாரி இருக்க மாட்டீர்கள் அல்லவா? தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்றோர் பழமொழி உண்டு. இவர்களுக்கு எதுவும் ஆடவில்லை என்பதுதான் பெரும் வேதனை.

எல்லாவற்றையும் கொட்டித்தீர்த்த பின் அவர் என்னிடம் கடைசியாக கூறியது,"வேலன்னு வந்து, காரெடுத்தன்னா மும்பை போய் அங்கருந்து பேங்களூரு போய் அங்கருந்து தூத்துகுடி போயின்னு ரெண்டு மூனு நா ராப்பவலா சுத்துன ஒடம்பு இது. இன்னைக்கு என்னால சேந்தாப்ல பத்தடி எடுத்து வைக்க முடியல." என்று முடித்தார்.

ஒட்டுமொத்த மனித வாழ்வின் சாரம்சமும் அவரின் இந்த கடைசி வார்த்தைகளில் அடங்கி நின்றதாக உணர்ந்தேன்.

நான் சந்தித்த மனிதர்கள், அதி அற்புதமானவர்கள்.

- எழுத்தாளுமை இக்ரிஸ் (08/03/2025)

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பகவத் கீதை - சர்ச்சையும் விளக்கமும்.

கடந்த சில நாட்களுக்கு முன் பகவத் கீதையில் சொல்லப்பட்ட,"கடமையை செய் பலனை எதிர்பாராதே" என்ற வசனத்தை மேற்கோளிட்டு ஒரு பதிவு இட்டிருந்தேன். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலவே எதிர்ப்புகளும் கிளம்பியது. அதைப்பற்றிய ஒரு விரிவு பார்வைதான் இந்த பதிவு. முதலில் கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பது மாபெரும் மூடத்தனம். இங்கு கடமை என்பதை நாம் பல விதத்தில் பொருத்தலாம். எதாவது ஒரு உறவின் வாயிலாகவோ அல்லது பிறருக்கும் செய்யும் உதவி வாயிலாகவே அல்லது தொழில்/வேலை ரீதியாகவோ எப்படி வேண்டுமானாலும் கடமை என்பதை பொருத்தலாம். இதில் எதிலும் நமக்கு யாதொரு பலனும் இல்லை என்றால் அதை எப்படி செய்வீர்கள்? உதாரணமாக, கோவிலுக்கு செல்வது புண்ணியம் அல்லது நினைத்தது நடக்கும் அல்லது சொர்க்கத்திற்கு செல்வோம் என்றொரு மூடநம்பிக்கை இல்லை எனில் இந்தியாவில் கோவில்களே இருக்காது. கோவிலுக்கு செல்வது தீங்கானது, சுடுகாட்டை பார்ப்பது போன்றது, பூனை குறுக்கே செல்வது போன்றது என சொல்லப்பட்டிருந்தால் கோவில்கள் என்ற அமைப்புகள் இருந்திருக்கும் என நினைக்கிறீர்களா? நிச்சயமாக இருந்திருக்காது. அதற்கு பின்னால் இருக்கும் அரசியலும், பிரி...

என் பார்வையில் காதல்

எது காதல்? எப்படி காதல்? நீ என்ன புரிந்து வைத்து இருக்கிறாய் காதலைப் பற்றி? உனக்கு என்ன தெரியும் காதலைப்பற்றி? என்றெல்லாம் பல கேள்விகளை சுமந்தபடி, இந்த பதிவை எழுத கடமைப்பட்டு இருக்கிறேன். நான் இன்றைய தேதியில் பார்த்த வகையில், இவர்களுக்கு காதல் என்பது ஒரு பொழுதுபோக்காகவும், தனிமையில் இருந்து தப்பிக்க உதவும் ஒரு வழியாகவும் மட்டுமே இருக்கிறது. நான் ஒரு ஓல்ட் சோல். நான் பார்த்த, நான் பழகிய, நான் கண்டு வியந்த பெரும் காதல்கள் ஏராளம். எ.கா., ஓகே கண்மணி திரைப்படத்தில் எல்லோரும் துல்கர்-நித்யா மேனன் ஜோடியை புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்த பொழுது நான் மட்டும் பிரகாஷ்ராஜ்-லீலா சாம்சன் ஜோடியை -தனியாக, மனதார, எவ்வித நெருடலுமின்றி- கொண்டாடிக் கொண்டிருந்தேன். கவனித்ததுண்டா? வீட்டில் இருக்கும் பெற்றோர்கள் ஆயிரம் முறை ஐ லவ் யூ சொல்லுவதை? மணிக்கொருமுறை ஒருமுறை மிஸ் யூ சொல்லுவதை? நிமிடத்திற்கு நிமிடம் முத்தங்கள் கொடுப்பதை? இது எதுவும் நடக்காது. குறைந்தபட்சம் பிறர் கண்ணில் படும்படி நடக்காது. ஆயிரம் சண்டை, லட்சம் மனஸ்தாபம், கோடி முறை பிரிந்துவிடலாம் என்ற கோபம் இருந்திருக்கும். ஆனால் காலை உணவை டிஃபன் பாக்ஸில் ...

சரியா? (2017 பதிவுகள்)

தலைக்கவசம் அணியுங்கள் என விளம்பரம் செய்யும் அரசு வாகனத்தை சரியாக ஓட்டுங்கள் என்றோ பொறுமையை கையாளுங்கள் என்றோ விளம்பரப்படுத்தாதது சரியா? வீட்டில், அலுவலகத்தில் இருக்கும் குப்பையை வெளியே போட வேண்டும் என சொல்பவர்கள் அதை குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என சொல்லாதது சரியா? பெண்களின் உடையிலும் நடையிலும் நடத்தையிலும் குறை சொல்பவர்கள் தத்தம் மகன்களை சரியாக வளர்க்காதது சரியா? சாதி என்பது தீண்டாமை என தெரிந்தும் சாதி பார்ப்பதில்லை என பெருமை பேசுபவர்கள் சாதி சான்றிதழ் வாங்குவது சரியா? இலவசங்களும் பணமும் வெற்று சலுகைகளும் கொடுத்து நம்மை முட்டாள் ஆக்குக்கிறார்கள் என தெரிந்தும் ஆக்குபவனையே ஆள அனுமதிப்பது சரியா? ஊழல் லஞ்சம் என அரசு அலுவலகங்கள் சாக்கடையாய் இருந்தாலும் அதில் நம் வேலை நடக்க பணத்தை கொட்டுவது சரியா? பள்ளிகளில் வாழ்க்கைக்கு தேவையான எதுவும் இல்லாமல் அசோகர் மரம் நட்டதையும் சோழர்கள் கோவில் கட்டியதையும் பாண்டியர்கள் தமிழை வளர்ததையும் சொல்லித் தருவது சரியா? பள்ளி கடந்து கல்லூரி வந்ததும் என்ன படித்தால் என்ன வேலை கிடைக்கும் வேலை கொடுப்பவனிடம் எப்படி நடந்து கொள்வது என வேலைக்காரர்களை உருவாக்கும் பட்...