என்னுடைய எழுத்துப் பயணத்தில், எத்தனையோ முறை எழுதுவதை நிறுத்தி இருக்கிறேன். மூன்று மாதம், ஆறு மாதம், சில நேரங்களில் வருடம்கூட தேவைப்படும், மீண்டும் எழுத துவங்க. ஆனால், இந்த முறை ஒன்றை எழுத துவங்கி, அதை பாதியில் நிறுத்தி, மீண்டும் அதை தொடரலாம் என நினைத்து, எழுத உட்காருகையில்.. வார்த்தைகள் கிடைக்காமல், அன்று நான் அதை எழுதுவதற்கான காரணமும், இன்று நான் தொடர்வதற்கான மனநிலையும் ஒன்றோடு ஒன்றிணையாமல், தடுமாறி, தடம் மாறி, ஆளரவமற்ற மயானமாய் உணர்கிறேன். இந்த தடுமாற்றம், தயக்கம், சிந்திக்கவியலா முட நிலை, ஏன்? எப்படி? எதற்காக? எது தடுக்கிறது? என்ற கேள்விகளை கடந்து.. இந்த நிலையை அப்படியே நிறுத்தி வை, தொடராதே! என்னும் பேராணை பிறப்பிக்கிறது மனது. கிரகிக்க நினைக்கிறதா? அழிக்க துடிக்கிறதா? வானளாவிய எதிர்ப்புகளுக்கு கலங்காத திமிர் அடங்கிப் போகிறதா? தெரியாது. இருப்பினும், இருக்கிறேன் காத்து கொண்டு. மீண்டும் பேனா எடுக்கும் தருவாயில், காகிதத்தில் வரைவது ஊதா மையாக இல்லாமல், கருஞ்சிவப்பு இரத்தமாக இருந்தால்.. காகித வாசனையும் இரத்த கெவுளும் சேர்ந்து நாசியை நடனமாட வைத்துவிடும். இருப்பினும், அந்த கேள்விக்கு எனக்கு...
ஆம்! நான் கடவுள்தான். சாத்தான்களின் கடவுள்.